போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

போக்குவரத்துத் தொழிலாளர்கள் வஞ்சிக்கப்படுவதை கண்டித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஏ.ஐ.டி.யு.சி தொழிலாளர்கள் சங்கத்தினர் பெரம்பலூர்

போக்குவரத்துத் தொழிலாளர்கள் வஞ்சிக்கப்படுவதை கண்டித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஏ.ஐ.டி.யு.சி தொழிலாளர்கள் சங்கத்தினர் பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையம் எதிரே கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு, ஏ.ஐ.டி.யு.சி கிளைத் தலைவர் என்.எம். ரெங்கராஜ் தலைமை வகித்தார். மாநில துணைப் பொதுச் செயலர் என். மணி, திருச்சி மண்டல மத்திய சங்கப் பொதுச் செயலர் சுப்பிரமணியன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் நிறைவடைந்து ஓராண்டு கடந்தும் பேசப்படாத நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான ஊதியத்தை அவர்களே உயர்த்திக்கொண்டதை கண்டிப்பது. ஆளும் கட்சியினருக்கு சாதகமாக செயல்பட்டு வரும் கிளை மற்றும் மாவட்ட மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பதவி உயர்வில் நடைபெறும் ஊழல்களை கண்டறிந்து, சம்பந்தப்பட்ட நபர்களை கைதுசெய்ய வேண்டும். கூடுதலாக பணியில் ஈடுபடும்போது அதற்கான ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை அலுவலகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கேண்டீனில் தரமான உணவு வழங்க வேண்டும்.
மழைகாலத்தில் சேதமடைந்த பேருந்துகளை இயக்க நிர்வாகம் நிர்பந்தப்படுத்துவதால், பேருந்தில் மழைநீர் ஒழுகும்போது பொதுமக்கள், ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மத்தியில் வாக்குவாதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பகல் முழுவதும் பணியில் ஈடுபட்ட ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களை இரவு நேரங்களில் சிறப்பு பேருந்துகளை இயக்க கட்டாயப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்கள் வஞ்சிக்கப்படுவதை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் வீ. ஞானசேகரன், துணைச் செயலர் ராஜேந்திரன், ஓ.ஐ.டி.யு.சி ஓய்வுபெற்றோர் மாவட்டச் செயலர் என். தியாகராஜன், கிளை நிர்வாகிகள் என். ஜெயராமன், சம்பத், ராஜேந்திரன், நடராஜன், ஆல்பர்ட் ஜான், கே. சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com