மானாவாரி மக்காச்சோளத்தில் கூடுதல் மகசூல் பெற ஆலோசனை

பெரம்பலூர் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் மானாவாரி மக்காச்சோளத்தில் கூடுதல் மகசூல் பெற விவசாயிகளுக்கு ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் மானாவாரி மக்காச்சோளத்தில் கூடுதல் மகசூல் பெற விவசாயிகளுக்கு ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
மானாவாரி மக்காசோளத்தில் கூடுதல் விளைச்சல் பெற கோடை உழவிற்கு பிறகு 2 ஆம் உழவில் ஏக்கருக்கு 5 டன் தொழு உரம், களர் நிலமாக இருந்தால் ஏக்கருக்கு 4 மூட்டை (200 கிலோ) ஜிப்சம் இட்டு உழ வேண்டும். கடைசி உழவில் அடியுரமாக மண் பரிசோதனை அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்ட அளவில் யூரியா, டி.ஏ.பி அல்லது காம்ப்ளக்ஸ் உரங்களை இட்டு உழ வேண்டும். ஒரு ஏக்கருக்கு 1 கிலோ அசோஸ்பைரில்லம் மற்றும் 1 கிலோ பாஸ்போபாக்டீரியா இரண்டையும் 15 கூடை நன்கு மட்கிய தொழு உரத்துடன் கலந்து, போதிய அளவு ஈரப்பதத்துடன் நிழலில் 15- 20 நாள்கள் வைத்திருந்து, விதைத்த 15 அல்லது 20-வது நாளில் வயலில் இட வேண்டும்.
மேலும், மானாவாரி மக்காசோளத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட இடைவெளியானது பாருக்கு பார் 45 செ.மீ, செடிக்கு செடி 30 செ.மீட்டராகும். எனவே, 45 செ.மீ இடைவெளியில் பார்கள் அமைத்துக்கொள்ள வேண்டும். 45 செ.மீ அல்லது 0.45 மீ இடைவெளியில் பார்களும், 30 செ.மீ அல்லது 0.30.மீ இடைவெளியில் செடிகளும் இருக்கும்பட்சத்தில், ஒரு ஏக்கரில் இருக்க வேண்டிய பயிர்களின் எண்ணிக்கையானது 4,000 ச.மீ (0.45 மீ- 0.30 மீ) 29, 630. தோராயமாக 30,000 செடிகள் ஒரு ஏக்கரில் பராமரிக்க வேண்டும்.
ஒரு ஏக்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட விதையளவானது, 8 முதல் 10 கிலோ அல்லது 30,000 விதைகள். இவ்வாறு 30,000 செடிகள் ஒரு ஏக்கரில் இருக்கும் பட்சத்தில், ஒரு செடியில் உள்ள ஒரு கதிரில் இருந்து குறைந்தபட்சமாக 100 கிராம் மணிகள் கிடைத்தால், ஏக்கரில் 3 டன் மகசூலும், ஒரு கதிரில் சராசரியாக 160 கிராம் மணிகள் கிடைத்தால் ஏக்கரில் 4.8 டன் மகசூல் பெறலாம். எனவே, விவசாயிகள் ஒரு ஏக்கரில் 30,000 செடிகள் இருக்குமாறு பயிர்களின் எண்ணிக்கையை பராமரிக்க வேண்டும். இதற்கு, கயிறு பிடித்து வரிசை நடவு முறையில் நடுவதே சிறந்த வழியாகும்.
மேலும், விதைகளை நடும்போது 4 செ.மீ ஆழத்தில் நட வேண்டும். மண் பரிசோதனை அடிப்படையில் மேலுரம் இடும்போது, ஏக்கருக்கு 5 கிலோ நுண்ணூட்ட உரத்தையும் தவறாமல் இட வேண்டும். எனவே, மானாவாரி மக்காசோளத்தில் தொழு உரம், மண் பரிசோதனை அடிப்படையில் உரங்கள், உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரம், முக்கியமாக ஏக்கரில் 30,000 செடிகள், வரிசை நடவு ஆகிய உத்திகளை கடைப்பிடித்தால் கூடுதல் மகசூல் பெறலாம் என மாவட்ட வேளாண்மைத் துறையினர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com