வேரழுகல் நோயால் சின்ன வெங்காய சாகுபடி பாதிப்பு: விவசாயிகள் வேதனை

பெரம்பலூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயப் பயிர்கள் வேரழுகல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். 

பெரம்பலூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயப் பயிர்கள் வேரழுகல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். 
 சின்ன வெங்காயம் சாகுபடியில் பெரம்பலூர் மாவட்டம் தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக முதலிடம் வகிக்கிறது. மாவட்டத்தில், பெரம்பலூர், ஆலத்தூர் ஆகிய வட்டாரங்களில் சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகளின் பிரதான தொழிலாக சின்ன வெங்காய சாகுபடி விளங்குகிறது. தமிழகத்தின் மொத்த சின்ன வெங்காய உற்பத்தியில், பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் 23 சதவீதம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
 அதன்படி, 2017-18-இல் தற்போது வரை 5,993 ஹெக்டேர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால் சாகுபடி பரப்பளவு குறைந்தது. இதனால் டிசம்பரில் அறுவடையான வெங்காயம் வரத்து குறைந்தது. வெளி மாநில வரத்தும் குறைந்ததால் கடந்த சில மாதங்களாக சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. புரட்டாசி பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட சின்ன வெங்காயத்தை, இன்னும் 10- 15 நாள்களில் அறுவடை செய்வதற்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், அண்மையில் பெய்த தொடர் மழையால் வேரழுகல் நோய் தாக்கியதால் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். 
 இதுகுறித்து, பாடாலூரில் சின்ன வெங்காயம் பயிரிட்டுள்ள விவசாயி அ. சுப்ரமணி கூறியது:
 விதை வெங்காயம், பூச்சி மருந்து, அடியுரம், ஆள் கூலி உள்பட ஏக்கருக்கு ரூ. 1 லட்சம் வரை செலவழித்து சாகுபடி செய்துள்ளோம். தற்போது, ஒருசில இடங்களில் அறுவடையும் தொடங்கியுள்ளது. இந்நிலையில், அண்மையில் பெய்த தொடர் மழையால் சின்ன வெங்காய வயல்களில் மழைநீர் தேங்கியது. விவசாயிகள் அவற்றை வெளியேற்றியும், பெரும்பாலான வயல்களில் வேரழுகல் நோய் ஏற்பட்டு, வயல்களில் ஆங்காங்கே பயிர்கள் சேதமடைந்து, தற்போது வயல் முழுவதும் பரவியுள்ளது. வெங்காய பயிர்களை பிடுங்கி பார்த்தால் காய்கள் அனைத்தும் அழுகி மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. 
 ஒருசில விவசாயிகள் அழுகிய வெங்காயத்தை அகற்றாமல், அதில் மாற்றுப்பயிர் சாகுபடி செய்வதற்காக உழவுப் பணியை மேற்கொண்டுள்ளனர். எஞ்சிய, முழு வளர்ச்சியடையாத சின்ன வெங்காயத்தை அறுவடை செய்து விற்பனை செய்தாலும், இடைத்தரகர்கள் அதை குறைந்த விலைக்கே வாங்குவார்கள். இதனால், புரட்டாசி பட்டத்தில் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. வாங்கிய கடனை திரும்ப செலுத்த வழியின்றி பல்வேறு பாதிப்புக்கு ஆளாகியுள்ளோம் என்றார் அவர்.
 கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் கிலோ ரூ. 5-க்கு விற்பனையான சின்ன வெங்காயம், தற்போது கிலோ ரூ. 160 வரை விற்பனையாகிறது. கடந்த 3 ஆண்டுகளாக பெரம்பலூர் மாவட்டத்தில் நிலவிய வறட்சியே இந்த விலையேற்றத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், புரட்டாசி பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட சின்ன வெங்காயம் அறுவடை செய்யப்பட்டால், அதன் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது வேரழுகல் நோயால் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதால், விலை குறையவாய்ப்பில்லை என வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.  
 கடந்த ஆண்டு கடும் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், தற்போது பெய்த தொடர் மழையால் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com