குடிநீர் கோரி கிராம மக்கள் மறியல்

பெரம்பலூர் அருகே வியாழக்கிழமை, முறையாக குடிநீர் விநியோகம் செய்யக் கோரி காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் அருகே வியாழக்கிழமை, முறையாக குடிநீர் விநியோகம் செய்யக் கோரி காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் அருகே எளம்பலூர் ஊராட்சிக்குள்பட்ட சமத்துவபுரம், மகாத்மா காந்திநகர், நேதாஜிநகர், அண்ணாமலைநகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு உப்போடை மற்றும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம், பொதுக் குழாய்களில் 25 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறதாம்.
இதனால், ஒரு சிலர் விலைக்கு வாகனங்களில் தண்ணீர் வாங்குகிறார்களாம். பெரும்பாலானோர் அங்குள்ள விவசாயக் கிணறுகளுக்குச் சென்று தண்ணீர் கொண்டு வருகிறார்களாம். பொதுக்குழாய்கள் மூலம் விநியோகம் செய்யப்படும் குடிநீரும் கழிவு நீராக உள்ளதாம்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லையாம். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், பெரம்பலூர் நகர் புறவழிச் சாலையில் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த வருவாய்த் துறையினரும், பெரம்பலூர் காவல் துறையினரும் அங்குசென்று, பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. மறியலால் அப்பகுதியில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனம் முற்றுகை:
பெரம்பலூர் அருகேயுள்ள லாடபுரம் கிராமத்தில் உள்ள தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனத்தால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் லாடபுரம் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறி, அந்த நிறுவனத்தை மூட  வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லாததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சிலர், தனியார் நிறுவனத்தை மூட வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
தகவலறிந்த வருவாய்த்துறையினர், காவல் துறையினர் அப்பகுதிக்குச் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அளித்த உறுதியைத் தொடர்ந்து முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com