குடிநீர் தட்டுப்பாடு: ஏரி நீரை பயன்படுத்தும் கிராம மக்கள்: தொற்றுநோய் பரவும் அபாயம்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே குடிநீர் தட்டுப்பாட்டால் கிராம மக்கள் ஏரி நீரை பயன்படுத்தி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே குடிநீர் தட்டுப்பாட்டால் கிராம மக்கள் ஏரி நீரை பயன்படுத்தி வருகின்றனர்.
கடுமையான வறட்சியால் வீடுகளில் போடப்பட்டுள்ள 1,000 அடிக்கும் அதிகமான ஆழ்துளை கிணறுகளில் கூட தண்ணீர் வற்றி பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால், பெரம்பலூர் மாவட்ட மக்கள் போதிய தண்ணீரின்றி அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தற்போதைய குடிநீர் தேவையை சமாளித்துக்கொள்ள தண்ணீர் லாரிகளை நாடி வருகின்றனர். லாரிகள் முலம் விற்கப்படும் தண்ணீருக்கும் தட்டுப்பாடு நிலவி வருவதால் 1,000 லிட்டர் கொள்ளவு கொண்ட தண்ணீர் ரூ. 350-க்கும், 7,500 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் ரூ. 1,500-க்கும் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதில், பெரும்பாலான வாகனங்களில் விற்கப்படும் தண்ணீர் தரமற்ற நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. விலை கொடுத்து தண்ணீர் வாங்கமுடியாத ஏழை, எளிய சாமானிய மக்கள் நகராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகத்தின் முலம் விநியோகம் செய்யப்படும் குடிநீரை நம்பியே உள்ளனர்.
கிராமப்புறங்களை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தை நம்பியே உள்ளனர். இதனால் பாதிப்புக்குள்னான மக்கள் விவசாய கிணறுகளுக்கு சென்று, அங்கிருந்துகொண்டு வரப்படும் தண்ணீரை குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்துக்குள்பட்ட குரும்பாபாளையம் கிராமத்தில் கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் முதல் பெரியோர் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் மோட்டார் சைக்கிளிலும், நடந்து சென்றும் அந்த கிராமத்தில் உள்ள ஏரியிலிருந்து தண்ணீரை எடுத்து வந்து குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது, இந்த ஏரியிலும் தண்ணீர் குறைந்து வருவதால் மிகவும் கலங்கலாகவும், தரமற்றதாகவும் உள்ளது. இதனால், இப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு தொற்றுநோய் ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமாரிடம் மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். எனவே, குரும்பாபாளையம் கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com