சின்னமுட்லு நீர்த்தேக்கம்: ஆட்சியர் ஆய்வு

சின்னமுட்லு நீர்த்தேக்கம் அமையவுள்ள இடத்தை செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.

சின்னமுட்லு நீர்த்தேக்கம் அமையவுள்ள இடத்தை செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூர் அருகேயுள்ள மலையாளப்பட்டி பகுதியில் அமைந்துள்ளது சின்னமுட்லு. இப்பகுதியில், ஆண்டுதோறும் வடகிழக்குப் பருவமழை காலத்தில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரை சேமித்து வைத்தால் கோடை காலங்களில் விவசாயப் பணிக்கும், அப்பகுதி பொதுமக்களின் குடிநீர் தேவைக்கும் பயன்படும்.
மேலும், சின்னமுட்லு பகுதியில் உள்ள பச்சைமலை உச்சியில் இருந்து கொட்டும் அருவியானது எட்டெருமை பாலி என்று அப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது. வடகிழக்குப் பருவமழை காலமான அக்டோபர் முதல் ஜனவரி மாதம் வரையிலான நான்கு மாதமும், பச்சைமலை பகுதியில் மிகுதியாக பொழியும் மழைநீரானது, எட்டெருமை பாலி அருவி வழியாக வழிந்தோடி, கல்லாற்றில் பெருக்கெடுத்து அரும்பாலூர் பகுதியில் உள்ள முக்கிய ஏரிகள் நிரம்பியது போக, எஞ்சிய மழைநீர் அனைத்தும் கல்லாற்றின் வழியே கரைபுரண்டோடி, கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலில் கலக்கிறது. இந்த நீரை சேமிக்க, சின்னமுட்லு பகுதியில் நீர்த்தேக்கம் அமைக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கடந்த 60 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதைக் கருத்தில் கொண்ட தமிழக அரசு திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொண்டு, பல்வேறு காரணங்களால் கிடப்பில் போடப்பட்டுள்ளது.  
இத்திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி பொதுமக்களும், விவசாயிகளும் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நீர்த்தேக்கம் அமையவுள்ள இடத்தை ஆய்வு மேற்கொள்ள தமிழக அரசு அண்மையில் ரூ. 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து,  சின்னமுட்லு நீர்த்தேக்கம் அமையவுள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா கூறியது:
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கையில், தமிழக முதல்வரால் 28.6.2017-ல் அறிவிப்பு வெளியிடப்பட்டு, இத்திட்ட ஆய்வு பணிக்காக ரூ. 10 லட்சம் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, பொதுப்பணித் துறையின் மூலம் ஆய்வு பணிக்கான திட்ட மதிப்பீடு ரூ. 10 லட்சத்துக்கு தயார் செய்து தமிழக அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது என்றார் அவர். ஆய்வின்போது, சட்டப்பேரவை உறுப்பினர் இரா. தமிழ்ச்செல்வன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ஸ்ரீதர், கோட்டாட்சியர் கதிரேசன், வட்டாட்சியர் பாரதிவளவன், வட்டார வளர்ச்சி அலுவலர் இ. மரியதாஸ், மருதையாறு வடிநில உபகோட்ட உதவி செயற்பொறியாளர் பிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com