பருத்தியில் இளஞ்சிவப்பு காய்ப்புழுவை கட்டுப்படுத்த யோசனை

பெரம்பலூர் மாவட்டத்தில் பருத்தி பயிரில் இளம் சிவப்பு காய்ப்புழுவின் தாக்குதலைக் கட்டுப்படுத்த யோசனை தெரிவித்துள்ளார் .

பெரம்பலூர் மாவட்டத்தில் பருத்தி பயிரில் இளம் சிவப்பு காய்ப்புழுவின் தாக்குதலைக் கட்டுப்படுத்த யோசனை தெரிவித்துள்ளார் ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத் திட்ட ஒருங்கிணைப்பாளர் (பொ) ஜெ. கதிரவன்.  
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பு: பெரம்பலூர் மாவட்டத்தில் பருத்தி பயிரானது சுமார் 33,900 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது, பருத்தி பயிரானது பூக்கும் பருவத்தில் உள்ள நிலையில் இளஞ்சிவப்பு காய்ப்புழுவின் தாக்குதல் ஆங்காங்கே தென்படுகிறது. இதன் அறிகுறியாக, பருத்தி பூவானது நன்கு விரியாமல் ரோஜா மொட்டுபோலத் தோற்றமளிக்கும். மேலும், பூவினுள் பார்க்கும்போது இளஞ் சிவப்பு காய்ப்புழுவின் தாக்குதல் காணப்படும்.  தாக்கப்பட்ட பூக்களில் இருந்து காய்கள் உருவாகும்போது வெளிப்புறமாக புழுவின் சேதத்தைக் காண முடியாது.  
இப்புழு தாக்கிய காய்களில் சொத்தை விழ ஆரம்பித்து, பருத்தியின் தரம் குறைய வாய்ப்புள்ளது. இந்த இளம் சிவப்பு காய்ப்புழுவின் வாழ்க்கை சுழற்சியை பொருத்தவரை ஒரு பெண் அந்துப் பூச்சியானது பூக்கள், மொட்டுகள் மற்றும் காய்களின் அடியில் உள்ள சந்துகளில் தட்டையான 100- 150 முட்டைகள் வரை இடுகிறது. இந்த முட்டையானது, 4 முதல் 7 நாள்களில் புழு நிலையை அடைகிறது. தென்னிந்தியாவில் நிலவும் தட்பவெப்ப நிலைப்படி, 25 முதல் 30 நாள்களில் புழுக்கள் வளர்ந்து கூட்டுப்புழுவாக மாறும். இந்தப் புழுவானது முதல் மற்றும் 2-ஆம் நிலை புழுக்கள் வெள்ளை நிறமாக இருக்கும். 3-ம் 4-ம் நிலை புழுக்கள் இளஞ்சிவப்பு நிறமாக இருக்கும். இதன் கூட்டுப்புழு 8 முதல் 13 நாள்களில் தாய் அந்துப்பூச்சியாக மாறுகிறது.  
இதைக் கட்டுப்படுத்த,  ஏக்கருக்கு 5 இடத்தில் இனக்கவர்ச்சிப் பொறிகளை வைத்து ஆண் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். இதை வைக்கும்போது பருத்தி பயிரின் உயரத்தில் இருந்து ஓர் அடிக்கு மேல் இருக்குமாறு வைக்கவும்.  பின் முட்டை ஒட்டுண்ணியான டிரைக்கோகிரம்மா டாய்டியே பேக்டிரே அல்லது டிரைக்கோகிரம்மா சைலோனிஸ் ஒரு ஏக்கருக்கு நாற்பதாயிரம் என்ற எண்ணிக்கையில் வெளியிட்டும் கட்டுப்படுத்தலாம். ஒட்டுண்ணி வெளியிட்ட வயலில் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகள் அடிப்பதை, வெளியிட்ட ஒரு வாரம் வரை தவிர்க்கவும்.
இந்தப் பூச்சியானது, பொருளாதார சேத நிலையைக் கடக்கும்போது, அதாவது 10 சதவீத பூக்களின் சேதம் அல்லது ஒரு நாளைக்கு 8 அந்துப்பூச்சிக்கு மேல் இனக்கவர்ச்சிப் பொறியில் தென்பட்டால் உடனடியாக ரசாயன பூச்சிக் கொல்லிகளில் ஸ்பினோஸாடு 45 இ.சி. பூச்சிக்கொல்லி ஏக்கருக்கு 40 மில்லி அல்லது தையோடிகார்ப் 75 டபள்யூ. பி. மருந்து 800 கிராம் அல்லது புரபனோபாஸ் 50 இ.சி. 600 மில்லி, இதில் ஏதாவது ஒன்றை கைத்தெளிப்பான் கொண்டு தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com