"டெங்கு கொசுவை ஒழிக்க மக்கள் பங்களிப்பு தேவை'

டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுவை ஒழிக்க பொதுமக்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்றார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.

டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுவை ஒழிக்க பொதுமக்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்றார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.
டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், டெங்கு உள்ள பகுதிகளாகக் கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ள சுகாதாரம், துப்புரவு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் மேலும் பேசியது:
டெங்கு பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. டெங்குவை ஒழிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பும் முக்கியம். டெங்கு காய்ச்சல் பரவுவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிக முக்கியமானதாகும். மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தீவிர டெங்கு ஒழிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும், காய்ச்சல் பரவ வாய்ப்புள்ள பகுதிகளாகக் கண்டறியப்பட்டுள்ள 74 பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் டெங்கு ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதனடிப்படையில், கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் என்.எஸ்.எஸ், இளையோர் செஞ்சிலுவைச் சங்க மாணவ, மாணவிகளை டெங்கு விழிப்புணர்வு பணியில் ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. டெங்கு பாதிப்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ள கிராமங்களில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு,  நீர்சேகரிக்கும் கலன்கள் பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டுள்ளதா, கொசு உற்பத்தியாகும் வகையில் நீர் தேங்கியுள்ளதா எனப் பார்வையிட்டு, அவற்றை சரிசெய்ய பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அங்கன்வாடி பணியாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில், சம்பந்தப்பட்ட கிராம செவிலியருடன் சென்று பார்வையிட்டு யாரேனும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கான சிகிச்சை குறித்த தகவல்களை பதிவேடுகளில் பதிந்து அதன் விவரத்தை உரிய அலுவலர் மூலம் மாவட்ட ஆட்சியருக்கு சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தனியார் பட்டா நிலங்களில் செடி, கொடிகள் வளர்ந்து அங்கிருந்து கொசு பரவும் அபாயம் இருந்தால் அந்த இடத்தைச் சுத்தப்படுத்த சம்பந்தப்பட்ட நில உரிமையாளருக்கு நகராட்சி ஆணையர், வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டாட்சியர்கள் உத்தரவிட வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சுத்தம் செய்யாத உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தனியார் நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பகுதிகளில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஆய்வு செய்து அப்பகுதியில் கொசு உற்பத்தியாகும் வகையில் நீர் தேங்கியிருந்தால் சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். எனவே, தனியார் நிறுவனங்கள் தங்களது பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.  
பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அதிகப்படியான காய்ச்சல் அல்லது டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி இருந்தால் முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கும், குழந்தையின் பெற்றோருக்கும் தகவல் அளித்து உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சை பெற அறிவுறுத்த வேண்டும்.
டெங்கு ஒழிப்பு பணியில் அனைத்துத் துறை அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட  பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து முடித்து, டெங்கு இல்லாத மாவட்டமாக பெரம்பலூரை மாற்ற ஒத்துழைக்க வேண்டும் என்றார் ஆட்சியர் சாந்தா.
கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ஸ்ரீதர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மனோகரன், வருவாய்க் கோட்டாட்சியர் கதிரேசன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சம்பத், ஊராட்சிகள் உதவி இயக்குநர் லோ. பாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com