பருத்தியில் புருட்டுனியா புழு : கட்டுப்படுத்த யோசனை

பெரம்பலூர் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பருத்திப் பயிரில் புருட்டுனியா புழு தாக்குதலை கட்டுப்படுத்த யோசனை

பெரம்பலூர் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பருத்திப் பயிரில் புருட்டுனியா புழு தாக்குதலை கட்டுப்படுத்த யோசனை தெரிவித்துள்ளார் வாலிகண்டபுரத்தில் உள்ள வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானியும், தலைவருமான (பொ) ஜெ. கதிரவன்.
இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூர் மாவட்டத்தில் மானாவாரியாக பருத்தி பயிர் 33,462 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 55 முதல் 65 நாள்கள் வயதாகி பூக்கும் பருவத்தில் செழுமையாக உள்ள பருத்தியில், பெரம்பலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் புருட்டுனியா புழுக்களின் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனால், பருத்தி செடிகளில் உள்ள இலைகள், சப்பைகள் ஆகியவை துளையிடப்பட்டு காணப்படுகின்றன. இதற்கு முக்கிய காரணம், தற்போது நிலவும் தட்பவெப்ப சூழ்நிலை, புழுக்களுக்கு சாதகமான குறைந்த வெப்பநிலை, பருத்தி செடிகளின் இளம் நிலையாகும்.    தற்போது பருத்தியை தாக்கிவரும் இந்த புருட்டுனியா புழுக்களை கட்டுப்படுத்த புருட்டுனியா புழுக்களுக்கென உருவாக்கப்பட்ட மாத்திரைகளுடன் கூடிய இனக்கவர்ச்சி பொறிகளை ஏக்கருக்கு 4 என்ற எண்ணிக்கையில் வைத்து, தாய் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழித்து இனப்பெருக்கத்தை தடைசெய்து கூடுதலாக பரவாமல் கட்டுப்படுத்தலாம்.
மேலும், தாக்குதல் அதிகமாக இருக்கும் சமயத்தில் நியூக்ளியர் பாலிஹெட்ரோசிஸ் வைரஸ் ஓர் ஏக்கருக்கு 500 மி.லி. லிட்டர் என்ற அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம். பரிந்துரைக்கப்பட்ட ரசாயன பூச்சிக்கொல்லிகளான தயோடிகார்ப் 75 ஐ 400 கிராம் அல்லது குளோரன்ட்ரினிலிபுரோல் 18.5 எஸ்.சி 60 மில்லி அல்லது புளுபெண்டையமைடு 39.35 எஸ்.சி 40 மில்லி இவற்றில் ஏதாவது ஒன்றை, ஓர் ஏக்கருக்கு 200 மில்லி என்ற அளவில் ஒட்டும் திரவத்துடன் கலந்த பருத்தி செடிகள் நன்றாக நனையும்படி காலை அல்லது மாலை வேளைகளில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
இந்த தொழில்நுட்பம் குறித்த விவசாயிகளின் சந்தேகங்களுக்கு வேளாண் அறிவியல் மையத்தை அணுகலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com