வடகிழக்குப் பருவமழை: அரசுக் கட்டடங்களின் உறுதித் தன்மையை பரிசோதிக்க அறிவுறுத்தல்

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு அரசு கட்டடங்களின் உறுதித் தன்மையை பரிசோதிக்க வேண்டும் என்றார் மாவட்ட வருவாய் அலுவலர் பா. பாஸ்கரன்.

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு அரசு கட்டடங்களின் உறுதித் தன்மையை பரிசோதிக்க வேண்டும் என்றார் மாவட்ட வருவாய் அலுவலர் பா. பாஸ்கரன்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட வருவாய் அலுவலர் மேலும் பேசியது:
அக். 1 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை பொழியும் காலமாக கணக்கிடப்பட்டு, மழை, வெள்ள சேதங்களிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசின் உத்தரவுப்படி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன்படி, மழைக்காலங்களில் வெள்ளம் பாதிக்கக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்ட இடங்களுக்கு கண்காணிப்பு பணிகளில் கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மேலும், பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து நீர்நிலைகளிலும் ஆக்கிரமிப்புகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மழை, வெள்ள காலங்களில் பாதிப்பு ஏற்படும் சமயத்தில் பொதுமக்களை தங்கவைப்பதற்கு தகுதியான இடங்களை வருவாய்த் துறையை சேர்ந்த அலுவலர்கள் தேர்வு செய்துகொள்ள வேண்டும்.
மேலும், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அவசர கட்டுப்பாட்டு அறையின் இலவச தொலைபேசி எண்ணை (1077) அனைத்து பொதுமக்களும் தெரிந்துகொள்ளும் வகையில், தேவையான விளம்பரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
அவசர காலங்களில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள தேவையான கனரக இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை இருப்பில் வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அரசுக் கட்டடங்கள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளில் பொதுப்பணித்துறை அலுவலர்கள் தல ஆய்வு மேற்கொண்டு, கட்டடங்களில் உறுதித் தன்மையை பரிசோதிக்க வேண்டும்.
மழை காலங்களில் பொதுமக்களுக்கு எவ்வித தடங்களுமின்றி உணவுப் பொருள்கள் விநியோகம் செய்வது தொடர்பான விரிவான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
மழைநீர் ஊருக்குள் புகும் நிலைமை இருக்கும்பட்சத்தில் பள்ளிகளிலும், அருகேயுள்ள அங்கன்வாடி மையங்கள், சமுதாயக் கூடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை தங்கவைக்க, கிராம நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாத வகையில், அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, வடகிழக்குப் பருவமழை காலத்தில் ஏற்படும் பேரிடர்களிலிருந்து பொதுமக்களை காப்பாற்ற தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ) மனோகரன், கூடுதல் கண்காணிப்பாளர் ஞான சிவக்குமார், கோட்டாட்சியர் கதிரேசன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அறிவழகன், பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் மகாராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com