பாடாலூரில் 10 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி தொடக்கம்

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரில் 10 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி தொடக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரில் 10 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி தொடக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
பாடாலூர் முன்னாள் ஊராட்சித் தலைவர் அ. வேல்முருகன் தலைமையிலான இளைஞர்கள் சிலர், பாடாலூர் ஊராட்சிக்குள்பட்ட ஏரி, குளங்களை சீரமைப்பது, வரத்து வாய்க்கால்களை பராமரிப்பது, சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது உள்ளிட்ட பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அழிந்து வரும் பனை மரங்களை மீட்டெடுக்கும் வகையில் பாடாலூர் ஊராட்சிக்குள்பட்ட நீர் நிலைகளில் 10 ஆயிரம் பனை விதைகள் நட்டு பராமரிப்பதென முடிவெடுத்தனர். அதன்படி, பாடாலூர் கருங்குட்டை அருகே முன்னாள் ஊராட்சித் தலைவர் அ. வேல்முருகன் தலைமையிலான இளைஞர்கள் ஒன்றிணைந்து, பாரம்பரிய பனை மரங்களை பாதுகாக்கவும், அப்பகுதியில் 10 ஆயிரம் பனை விதைகள் நடுவதென உறுதிமொழி ஏற்றனர்.
பின்னர் கருங்குளம் கரைப்பகுதிகளில் முதல்கட்டமாக 300 பனை விதைகளை நட்டனர்.
தொடர்ந்து, அடிப்பள்ளம் ஏரி, ஊராட்சிக்குள்பட்ட 30 நீர்த்தேக்க அணைகளின் கரைகள், அரசுக்கு சொந்தமான பொதுப்பாதைகள் உள்ளிட்ட இடங்களில் பனை விதைகள் நடும் பணி நடைபெறும்    . 
சராசரியாக ஒரு பனைமரம், கனிகள் கொடுக்க குறைந்தது 20 ஆண்டுகளாகும். 30 அடி உயரம் வரை வளரக்கூடியது. பனைமரங்களின் வளர்ச்சிக்கு குறைந்தளவு தண்ணீர் போதும். அதிகளவில் ஆக்சிஜன் வெளியிடக்கூடியது. இந்த மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு, பனங்கற்கண்டு, கருப்பட்டி உள்ளிட்டவை உடலின் சூட்டைத் தணிப்பதோடு சிறந்த இனிப்புப் பண்டங்கள் தயாரிக்கவும் பயன்படுகின்றன. அனைவருக்கும் ஏற்ற சிறந்த உணவாக உள்ளது. கடும் வறட்சியையும், அதிக வெப்பத்தையும் தாங்கி வளரக்கூடியது.
தற்போது பனைமரம் அழிவின் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. பனையைப் பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், இயற்கையை வளர்க்கவும் இப்பணியைத் தொடங்கியுள்ளோம். தொடர்ந்து இந்தப் பணி அனைத்து ஏரிகளிலும் செயல்படுத்தப்பட உள்ளது என்றார் வேல்முருகன்.
நிகழ்ச்சியின்போது, ஆலத்தூர் ஒன்றியக்குழு முன்னாள் துணைத் தலைவர் ராம. கமலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com