மாணவர்களின் பாதுகாப்பான பேருந்து பயணம் உறுதியாகுமா?

பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனங்களின் பராமரிப்பை சோதனையிடுவதுபோல அரசுப் பேருந்து, மினி பேருந்து

பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனங்களின் பராமரிப்பை சோதனையிடுவதுபோல அரசுப் பேருந்து, மினி பேருந்து, ஷேர் ஆட்டோ மற்றும் வேன்களில் பள்ளிக்குச் சென்று வரும் பள்ளி மாணவ, மாணவிகள் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்வதையும்  மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை  எழுந்துள்ளது. 
மாவட்டம்தோறும் வட்டாரப் போக்குவரத்துத் துறை சார்பில், தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்களின் பராமரிப்பு குறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டு,  தகுதியற்ற ஓட்டுநர்கள், லாயக்கற்ற வாகனங்களைக் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட பள்ளி, கல்லூரி நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் சுமார் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தினமும் அரசு, மினி பேருந்துகளில் பள்ளி,  கல்லூரிகளுக்குச் சென்று வருகின்றனர். கிராமப்புறங்களில் தனியார் பேருந்து மற்றும் வேன் போக்குவரத்து இல்லாத இடங்களில், அரசுப் பேருந்துகளை மட்டுமே நம்பி மாணவர்கள் பள்ளிக்குச் சென்று வருகின்றனர். 
காலை, மாலைகளில் மாணவர்கள், விவசாயிகள், கூலித் தொழிலாளர்களின் கூட்டம் அதிகமிருப்பதால், பெரும்பாலான இடங்களில் அரசுப் பேருந்துகள் குறிப்பிட்ட நிறுத்தத்தில் நிறுத்துவதில்லை. நிறுத்தத்தை விட்டு தள்ளி பேருந்தை நிறுத்துவதால்  புத்தகச் சுமையுடன் மாணவர்கள் ஓடிச் சென்று பேருந்துகளில் ஏறி பயணிப்பது அன்றாட  நிகழ்வாகும்.
பெரும்பாலும் கிராமப் பகுதிகளுக்கு பராமரிப்புக் குறைபாடுள்ள அரசு பேருந்துகளே இயக்கப்படுகின்றன. இப் பேருந்துகள் பழுதடைந்து வழியில் நின்றால் வேறு வழியின்றி மாணவர்கள் நடந்தே பள்ளிக்குச் செல்லும் நிலை உள்ளது.  
மாணவ, மாணவிகள் பராமரிப்புக் குறைபாடுள்ள அரசு, மினி பேருந்துகள், ஷேர் ஆட்டோக்கள், வேன்களில் பயணிப்பது பெற்றோரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 
தனியார் பள்ளி வாகனங்களின் பராமரிப்பு குறித்து சோதனை மேற்கொண்டு மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதுபோல, பெரம்பலூர் மாவட்டத்துக்குள்பட்ட அனைத்துப் பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் பள்ளிக்குச் சென்று வர போதிய எண்ணிக்கையில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறதா, அரசு மற்றும் மினி பேருந்துகள், ஷேர் ஆட்டோக்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா, பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், தனியார் வேன், ஆட்டோக்கள் முறையான அனுமதி பெற்றுள்ளனவா என்பதை சோதனையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். 
மேலும், கூட்ட நெரிசலுள்ள பேருந்து நிறுத்தங்களைக் கண்டறிந்து, பேருந்துகளில் ஏறும் மாணவர்களை முறைப்படுத்தும் பணியில் போலீஸாரை  ஈடுபடுத்தவும், மாணவர்கள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வதை உறுதி செய்யவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 
இதுகுறித்து சமூக ஆர்வலர் வி. குமார் கூறியது: 
தனியார் பள்ளி வாகனங்களுக்கு சோதனை நடத்துவதைபோல, அரசுப் பேருந்துகள், மினி பேருந்துகள், ஆட்டோ மற்றும் சரக்கு ஆட்டோக்களின் பராமரிப்பு மற்றும் இயக்கம் குறித்தும் வட்டாரப் போக்குவரத்துத் துறை, காவல் துறை மற்றும் வருவாய்த் துறையினர் ஒருங்கிணைந்து சோதனை நடத்த வேண்டும். கிராமப்புற பள்ளி மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை கருத்தில்கொண்டு காலை, மாலைகளில் கூடுதல் பேருந்து இயக்க வேண்டும். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தப்பட்ட வழித்தடங்களில் இயக்கப்பட்ட பேருந்துகளே இன்றளவும் இயக்கப்படுகின்றன. மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கிராமப்புறங்களுக்கு கூடுதல் பேருந்து வசதிகள் தேவை என்பதை தமிழக அரசு கருத்தில்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com