ரேஷன் பொருள்களை முறையாக வழங்காத விற்பனையாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: பெரம்பலூர் ஆட்சியர் எச்சரிக்கை

ரேஷன் பொருள்களை முறையாக வழங்காத நியாயவிலை அங்காடி விற்பனையாளர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆட்சியர் வே. சாந்தா.

ரேஷன் பொருள்களை முறையாக வழங்காத நியாயவிலை அங்காடி விற்பனையாளர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆட்சியர் வே. சாந்தா.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், பொது விநியோகத் திட்ட உணவுப்பொருள் வழங்கல் தொடர்பாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினர் மா. சந்திரகாசி முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் மேலும் பேசியது: 
உணவு பாதுகாப்பு விதிகளின் படி, பெரம்பலூர் மாவட்டத்தில் நியாய விலை அங்காடிகளில் அத்தியாவசியப் பொருள்கள் வழங்குவதில் பெறப்படும் புகார் மீது நடவடிக்கை மேற்கொள்வதற்கு வட்ட, மாவட்ட மற்றும் நியாய விலைக்கடைகள் வாரியாக கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
பொது விநியோகத்திட்ட பொருள்கள் எவ்வித சுணக்கமும் இன்றி, முறையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் பணிகளை வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் கூட்டுறவு சார்-பதிவாளர்கள் கண்காணித்து, ரேஷன் பொருள்களை முறையாக வழங்காத விற்பனையாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். 
மாவட்ட கண்காணிப்புக் குழுக் கூட்டம் காலாண்டுக்கு ஒருமுறை கூட்டி ஆய்வு செய்ய வேண்டும். மேலும், பொது விநியோகத் திட்ட பொருள்கள் வழங்குவதில் பாதிக்கப்பட்ட நபர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் அல்லது மாவட்ட குறைதீர் அலுவலரிடம் நேரடியாக எழுத்து வடிவில், மின்னஞ்சல், உதவி மையம் அல்லது கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமாக புகாரைத் தெரிவிக்கலாம். மேற்கண்ட புகார் பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாள்களுக்குள், அதற்கான தீர்வை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அளிக்க வேண்டும் என்றார் ஆட்சியர் சாந்தா.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி, வருவாய் கோட்டாட்சியர் (பொ) ச. மனோகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் (பொ)) எல். விஜயலட்சுமி, கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் த. பாண்டிதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com