சத்துணவு ஊழியர்கள் மறியல் : 257 பேர் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சாலை மறியல் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்ட 205 சத்துணவு ஊழியர்களை பெரம்பலூர் போலீஸார் கைது செய்தனர். 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சாலை மறியல் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்ட 205 சத்துணவு ஊழியர்களை பெரம்பலூர் போலீஸார் கைது செய்தனர். 
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பொன். ஆனந்தராசு தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் ஜி. வெங்கடாஜலபதி, எம். சின்னதுரை, எம். வசந்தி, பி. மணிமேகலை, எஸ். வள்ளியம்மை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டச் செயலாளர் ஆர். சவிதா, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கி. ஆளவந்தார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். 
ஆர்ப்பாட்டத்தில், சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணி ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு பணிக்கொடை ரூ. 5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கும் பொங்கலுக்கு ஊக்கத்தொகை அளிக்க வேண்டும். சமையலர், உதவியாளர், அமைப்பாளர் ஆகியோருக்கு தகுதி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. 
தொடர்ந்து, மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாலக்கரை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட 14 ஆண்கள் உள்பட 205 பேரை பெரம்பலூர் போலீஸார் கைது செய்தனர். பெரம்பலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
அரியலூரில்...
 பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூர் பேருந்து நிலையம் முன்பு வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர்  சங்கத்தினர் 52 பேர் கைது செய்யப்பட்டனர்.
காலமுறை ஊதியம், மாதாந்திர ஓய்வூதியம், ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு ஒட்டுமொத்த பணிக்கொடை ரூ. 3 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூர் அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர், அங்கிருந்து பேரணியாகச் சென்று பேருந்து  நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். 
அப்போது அங்கு பாதுகாப்புப்  பணியில் ஈடுபட்டிருந்த அரியலூர் போலீஸார், 4 ஆண்கள் உள்பட 52 பேரைக் கைது செய்து மாலையில் விடுவித்தனர். போராட்டத்துக்கு மாவட்ட துணைத் தலைவர்கள்  குணசேகரன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் சுமதி முன்னிலை வகித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com