கூலித்தொழிலாளி மீது குண்டர் சட்டம்: குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனு

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே, கூலித்தொழிலாளி மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய போலீஸார் நடவடிக்கை எடுப்பதை நிறுத்தக்கோரி, அவரது குடும்பத்தினர் பெரம்பலூர் ஆட்சியர்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே, கூலித்தொழிலாளி மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய போலீஸார் நடவடிக்கை எடுப்பதை நிறுத்தக்கோரி, அவரது குடும்பத்தினர் பெரம்பலூர் ஆட்சியர் வே. சாந்தாவிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
இதுகுறித்து பெரம்பலூர் மாவட்டம், பென்னக்கோணம் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மனைவி கமலம், தனது குழந்தைகளுடன் அளித்த மனு:
எனக்கு 4 குழந்தைகள் உள்ளனர். கூலித்தொழிலாளியான எனது கணவர் பன்னீர்செல்வம், கடந்த 4 ஆம் தேதி குடும்பத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்காக, அரசு மதுபானக் கடையிலிருந்து 10 மதுபாட்டில்களை வாங்கி வந்தபோது, மங்கலமேடு போலீஸார் வழிமறித்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது, அவர் மீது கள்ளச்சாராயம் வைத்திருந்ததாக வழக்கு பதிந்து, குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
எனது கணவர் போலீஸாரால் கைது செய்யப்பட்ட நாள் முதல், அவரது தாய் அஞ்சலம் உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே, உரிய விசாரணை மேற்கொண்டு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் வழக்கு பதிவு செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
சட்ட விரோதமாக மது அருந்தும் கூடம்:
பெரம்பலூர் மாவவட்டம், குன்னம் அருகேயுள்ள பெருமத்தூர் கிராமத்தைச் சேர்ந்த குள்ளன் மகன் ஜோதி உள்ளிட்டோர் அளித்த மனு:
லப்பைக்குடிகாடு செல்லும் பாதையில், தனியார் பேருந்து உரிமையாளருக்குச் சொந்தமான இடத்தில், அரசு மதுபானக் கடை கண்காணிப்பாளர் ரமேஷ் மற்றும் அழகு துரை, முத்தையா, மணிவாசகம், துரை ஆகியோர், அரசு அனுமதியின்றி, அரசு மதுபானக் கடைக்கு அருகே மது அருந்தும் கூடம் நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வருகிறது. எனவே, அனுமதியின்றி செயல்பட்டு வரும் மது அருந்தும் கூடத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com