பெரம்பலூர்,அரியலூரில் ஆயுத பூஜை பொருள்கள் விலை உயர்வு

பெரம்பலூரில் ஆயுத பூஜைக்கான பூஜைப் பொருள்கள் மற்றும் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

பெரம்பலூரில் ஆயுத பூஜைக்கான பூஜைப் பொருள்கள் மற்றும் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
ஆயுதபூஜை பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், லாரி பட்டறைகளை சுத்தம் செய்யும் பணி புதன்கிழமை முழுவீச்சில் நடைபெற்றது. மேலும், பூஜையில் இடம் பெறும் பொரி, கடலை, வெல்லம் உள்ளிட்ட பொருள்களின் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. இதற்காக சாலை ஓரங்களில் அமைக்கப்பட்ட தற்காலிக பூஜை பொருள்கள் விற்பனை கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.  
பெரம்பலூர் நகரைப் பொறுத்த வரையில் பழைய, புறநகர் பேருந்து நிலையங்கள், கடைவீதி, பாலக்கரை, தலைமை அஞ்சலகத் தெரு சாலைகள் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் தற்காலிகக் கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.
இதேபோல பூஜைகளை முடித்துக் கொண்டு திருஷ்டி கழிப்பதற்காக பூசணிக்காய் உடைப்பதும் வழக்கம். இதனால், பூசணிக்காயும் அதிகளவில் சாலை ஓரங்களில் விற்பனைக்காகக் குவிக்கப்பட்டிருந்தன. இவற்றை பெரம்பலூர் மாவட்டத்தில் சாகுபடி செய்திருந்த விவசாயிகளும், வியாபாரிகளும் விற்பனைக்கு வைத்திருந்தனர்.
இவை, அவற்றின் தரத்தையும், அளவையும் பொறுத்து ரூ. 50 முதல் ரூ. 100 வரை விற்பனை செய்யப்பட்டன. வழக்கமான நாள்களை விட விலை உயர்வாக இருந்தாலும், ஆயுத பூஜைக்காக பொதுமக்களும், வியாபாரிகளும் ஆர்வத்துடன் பூசணிக்காய்களை வாங்கிச் சென்றனர்.
பெரம்பலூரில் உள்ள பூக்கள் மண்டியில் பல்வேறு வகையான பூக்களின் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. கடந்த வாரத்தை விட, ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்களின் விலை கடுமையாக உயர்ந்தது. ஆயுத பூஜையையொட்டி பூஜைப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்திருந்தாலும் விற்பனை அமோகமாக நடைபெறுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
போக்குவரத்து நெரிசல்: பெரம்பலூர் நகரை பொறுத்தவரை சாதாரண நாள்களிலேயே அதிகளவில் போக்குவரத்து நெரிசல் காணப்படும், இந்நிலையில், பண்டிக்கைக்காலம் என்பதால் பெரம்பலூர் நகரின் பிரதான சாலை ஓரங்களில் தரைக்கடகள் அதிகளவில் வைக்கப்பட்டிருந்தன. இதனால், பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம், கடைவீதி, தலைமை அஞ்சலகத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்களால் வாகன ஓட்டுநர்களும், பொது மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த போலீஸாரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அரியலூர்: ஆயுத பூஜையை முன்னிட்டு அரியலூரில் பூஜை பொருள்கள், பொரி, பூசணி, பழங்கள், பூக்கள், தோரணங்களை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.
நவராத்தி விழாவின் 9 ஆவது நாளான வியாழக்கிழமை (அக்.18)ஆயுத பூஜையும், பத்தாவது நாளான நாளை விஜயதசமியும் நாடும் முழுவதும் கொண்டாடப்படுகிறது.இந்தப் பண்டிகையையொட்டி திருச்சி, கடலூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து வாழைத்தார், கரும்பு, பூக்கள் உள்ளிட்டவை  அரியலூர் சந்தைகளில் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன. 
ஒரு தாரின் விலை குறைந்தபட்சமாக ரூ.400 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பொரி, அவல், பொட்டுக் கடலை, கரும்பு, நாட்டு சர்க்கரை, வாழைக்கன்று, தோரணம், பூசணிக்காய், பழங்கள் போன்றவை வெளியூர்களில் இருந்து குவிந்துள்ளன. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். 
காய்கறிகள் விலையைக் காட்டிலும் பூக்களின் விலைகள் அதிகமாக இருந்தது.  மேலும், கடைகளில் பல்வேறு வண்ணங்களில் விதவிதமான தோரணங்கள் விற்பனைக்கு வந்துள்ளதால் பொதுமக்கள் வாங்கிச் சென்றனர்.  தொடர்ந்து 4 நாள்கள் விடுமுறை விடப்பட்டுள்ளதால் வெளியூரில் இருந்து அரியலூரில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர். இதனால் அரியலூர் பேருந்து நிலையம், ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com