"மாணவர்களின் சிந்தனைத் திறனை மேம்படுத்த வேண்டும்'

மாணவர்களின் சிந்தனைத் திறனை ஆசிரியர்கள் மேம்படுத்த வேண்டும் என்றார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ். செந்தில்வேல்முருகன்.

மாணவர்களின் சிந்தனைத் திறனை ஆசிரியர்கள் மேம்படுத்த வேண்டும் என்றார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ். செந்தில்வேல்முருகன்.
புதுக்கோட்டை மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் சார்பில், மாவட்ட அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஜூலை10- 15 வரை நடைபெற்ற  பணியிடைப் பயிற்சி முகாம் நிறைவுநாளில் பங்கேற்று மேலும் அவர் பேசியது:
அறிவியல் பாட ஆசிரியர்கள் மாணவர்களின் ஆராய்ந்து அறியும் திறனை வளர்த்து அறிவியல் மனப்பான்மையை  வெளிக்கொணர வேண்டும். ஆசிரியர்கள் வளர்ந்து வரும் அறிவியல் முன்னேற்றத்திற்கேற்ப அன்றாட நிகழ்வுகளை அறிந்து கொண்டு அதற்கேற்றவாறு மாணவர்களின் சிந்தனைத் திறனை மேம்படுத்தவேண்டும்.
குறிப்பாக, தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தின் பாடத்திட்டங்களுக்கு இணையாக  கற்பித்தலை மேற்கொள்ள ஆசிரியர்கள் தங்களைத் தயார்படுத்திக்கொண்டு மாணவர்களின் உயர் சிந்தனைத் திறனை வளர்க்க வேண்டும். ஒவ்வொரு பாடப் பொருளுக்கு ஏற்றவாறு மாணவர்களை எளிமையாகவும், இனிமையாகவும் ஆர்வமூட்டி ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும்.
செய்முறைப் பயிற்சியுடன் கூடிய கற்பித்தலை மேற்கொண்டு வளர்ந்து வரும் உலகில் பல போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளத் தக்கவகையில் மாணவர்களை தயார்செய்து, எதிர்காலத்தில் உயர்ந்த இலக்கை அடைய ஆசிரியர்கள் பாடுபடவேண்டும்.
இதேபோல, கணிதப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மவுன்ட்சீயோன் பொறியியல் கல்லூரியிலும், அறந்தாங்கி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த   கணிதப் பட்டதாரிஆசிரியர்களுக்கு கேப்பரை வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியிலும் ஜூலை17 முதல்  21 வரை  பணியிடைப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது என்றார் அவர்.
நிகழ்ச்சியில், அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் ஆர். சந்தியா,  பேராசிரியர் பொ. ராஜமாணிக்கம், கவிஞர்கள் ஜீவி, நா. முத்துநிலவன், முனைவர் கனகசபாபதி, எஸ். முத்துராமன், அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் அ. மணவாளன் ஆகியோர் பேசினர்.
பயிற்சியில் மாநில முதன்மைக் கருத்தாளர்கள் எம். பூமிநாதன், வி. கோவிந்தராஜன் ஆகியோர் தலைமையில் 45 கருத்தாளர்கள் பங்கேற்று பயிற்சி அளித்தனர்.
இதேபோல, அறந்தாங்கி கல்வி மாவட்ட அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு எம்.என்.எஸ்.கே. பொறியியல் கல்லூரியில் பணியிடை பயிற்சி நடைபெற்றது.
இதில்,  புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 9 , 10 ஆம் வகுப்புகளுக்கு கற்பிக்கும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் 300 பேரும், 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் 409 பேரும் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை,  அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்ட மாவட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சி. பழனிவேலு தலைமையில், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராசி. பன்னீர்செல்வன், க. ராஜா ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com