3 மாதங்களில் தமிழக அரசியலில் மாற்று சக்தியாக பாஜக மாறும்: பாஜக தலைவர் தமிழிசை பேட்டி

அடுத்த 3 மாதங்களில் தமிழக அரசியலில் மாற்று சக்தியாக பாஜக விளங்கும் என்றார் அந்த கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை செளந்திரராஜன்.

அடுத்த 3 மாதங்களில் தமிழக அரசியலில் மாற்று சக்தியாக பாஜக விளங்கும் என்றார் அந்த கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை செளந்திரராஜன்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் திங்கள்கிழமை நடைபெற்ற கட்சிப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கச் செல்லும் வழியில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது:
தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் மத்திய அரசின் 3 ஆண்டு சாதனைகளை விளக்கும் பொதுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஊழலற்ற, வெளிப்படையான, வளர்ச்சிமிக்க நிர்வாகம் தேவை என நினைக்கிறோம்.
தமிழகம் முழுவதும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ரூ. 100 கோடியில் நீர்நிலைகளை தூர்வாருகிறோம் என அறிவித்தபடி பணிகள் நடைபெறவில்லை. குறிப்பாக, சென்னையைச் சுற்றியுள்ள 4 ஏரிகளும் தூர்வாரப்படவில்லை.
30 மணல் குவாரிகளை மூடிவிட்டு, 70 மணல் குவாரிகளைத் திறந்துள்ளனர். ஒரு லோடு மணல் ரூ. 10 ஆயிரம் என்பதும், ஆற்று மணலுடன் கடல் மணலை கலப்படம் செய்து விற்பதும் மணல் விவகாரத்தில் அதிர்ச்சியளிக்கும் தகவலாக உள்ளது.
சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் மக்கள் பிரச்னையைவிட, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற அவசரப்படுவதில்தான் அதிக கவனம் செலுத்துகிறார். எப்போதும் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்வதை விட்டுவிட்டு மக்கள் பிரச்னைகளை விவாதிக்க வேண்டும்.
ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் கட்சியினர் மாநிலத் தலைமையை எதிர்த்து உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள நிலையில், திருநாவுக்கரசர் பாஜகவை குறைகூறுவது வேடிக்கையானது.
பிரதமர் மோடியை தரக்குறைவாக விமர்சனம் செய்த திருமாவளவனுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். தாழ்த்தப்பட்டோருக்கான ஆணையத்தின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த முருகன் என்பவரை மோடி நியமனம் செய்துள்ளார்.
அடுத்த 3 மாதங்களில் தமிழக அரசியலில் மாற்றுசக்தியாக பாஜக மாறும். கட்சியின் வளர்ச்சிக்காக  நியமிக்கப்பட்ட முழுநேர ஊழியர்கள் 12,500 பேர் வரும் 23 ஆம் தேதி முதல் பணியாற்றவுள்ளனர் என்றார் தமிழிசை செளந்திரராஜன்.
பேட்டியின்போது, கட்சியின் மாநிலச் செயலாளர் பி.டி. அரசக்குமார், மாவட்டத் தலைவர் ராம. சேதுபதி, நகரத் தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com