"குழந்தைகளின் வயிற்றுப்போக்கில் மெத்தனம் காட்டக் கூடாது'

குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், பெற்றோர்கள் மெத்தனமாக இருக்கக் கூடாது என்றார் ஆட்சியர் சு. கணேஷ்.

குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், பெற்றோர்கள் மெத்தனமாக இருக்கக் கூடாது என்றார் ஆட்சியர் சு. கணேஷ்.
புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவக் கல்லூரி மகப்பேறு மருத்துவமனையில் புதுக்கோட்டை பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மருந்துத் துறை, நகராட்சி சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற வயிற்றுப்போக்கு, காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாமைத் தொடக்கி வைத்து 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு ஓஆர்எஸ் கரைசல் பொட்டலங்கள், துத்தநாக மாத்திரைகளை வழங்கி அவர் மேலும் பேசியது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளிடையே ஏற்படும் வயிற்றுப்போக்கு நோயால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்கும் வகையில், திங்கள்கிழமை முதல் (ஜூன் 19), ஜூலை 1 ஆம் தேதி வரை தீவிர வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்தும் மற்றும் தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிப்பது தொடர்பான இருவார முகாம் தொடக்கிவைக்கப்பட்டுள்ளது.
 பாதுகாப்பற்ற குடிநீர், உணவு மூலம் நுண்கிருமிகள் உடலினுள் செல்வதால் உருவாகும் வயிற்றுப்போக்கால் நீரிழப்பு ஏற்பட்டு குழந்தைகளின் மரணத்துக்குக் காரணமாக அமைகிறது.
எனவே, வயிற்றுப்போக்கால் ஏற்படும் உயிரிழப்பைக் கட்டுப்படுத்த இத்திட்டத்தின் மூலம் 5 வயதுக்கு உள்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் வீடுவீடாகச் சென்று உப்பு சர்க்கரை பொட்டலங்கள் வழங்கப்பட உள்ளன.
இம்முகாமின் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 5 வயதுக்கு உள்பட்ட 1,50,188 குழந்தைகள் பயனடைய உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 1 மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 12 அரசு மருத்துவமனைகள், 66 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 242 துணை சுகாதார நிலையங்கள், 3 நகர்நல மையங்கள் மற்றும் 1,799 அங்கன்வாடி மையங்களின் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் தீவிர வயிற்றுப்போக்கு குறித்த விழிப்புணர்வை அனைத்து தாய்மார்களுக்கும் ஏற்படுத்தி அதைத் தடுப்பதற்கான ஆலோசனைகளும் வழங்கப்படும்.
மேலும், வயிற்றுப்போக்கு ஏற்படும் சமயங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்த துத்தநாக மாத்திரைகளும், நீரிழப்பைக் கட்டுப்படுத்த உப்பு சர்க்கரை கரைசலும் வழங்கப்பட உள்ளது.
மேலும், பெண்களுக்கு தாய்ப்பாலின் அவசியம் குறித்தும், பாலூட்டும் தாய்மார்கள் பேணவேண்டிய தன்சுத்தம் குறித்தும், 6 மாதம் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பது குறித்தும் நலக்கல்வி அளிக்கப்படும் என்றார் ஆட்சியர்.
நிகழ்ச்சியில், இணை இயக்குநர் (பொது சுகாதாரம், ஊரக நலப்பணிகள்) ஆர். சுரேஷ்குமார், துணை இயக்குநர்கள் (பொது சுகாதாரம்) பரணிதரன்(புதுக்கோட்டை), பி. கலைவாணி (அறந்தாங்கி), நகராட்சி ஆணையர் (பொ) ஜீவாசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com