வறட்சியால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறி: இரா. முத்தரசன் பேட்டி

தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சியால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா. முத்தரசன்.

தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சியால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா. முத்தரசன்.
பொன்னமராவதியில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. கடந்த பருவத்தில் மழையின்றி எந்த விவசாயப் பணியும் நடைபெறாததால் வேளாண் தொழிலாளர்கள் வெளியூர்களுக்கு குடிபெயர்ந்தனர். இதுகுறித்து நாங்கள் பலமுறை வலியுறுத்தியும் தமிழக அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை, விவசாயிகளுக்குப் போதிய நிவாரணம் வழங்கவில்லை. வறட்சியால் தமிழகத்தில் ஏரி, குளம், கண்மாய்கள் வறண்டுள்ளன. எனவே வரும் காலங்களில் மழை நீரைத் தேக்கிவைக்க நீர்நிலைகளைத் தூர்வார வேண்டும். குளக்கரைகளை உயர்த்தி மரங்களை நட வேண்டும். மாநில அரசு மக்களுக்கு குடிநீர் தருவதற்குப் பதில் மதுக்கடைகளை திறப்பதில்தான் முழுக் கவனம் செலுத்திவருகிறது. புதிய கடைகளைத் திறக்கக் கூடாது. படிப்படியாக மதுவிலக்கு என்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். அதுபோல டாஸ்மாக் பணியாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும்.
நீட்தேர்வு, இந்தி திணிப்பு போன்ற பல்வேறு பிரச்னைகளில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் அனைத்து முயற்சிகளும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன. தனது உரிமைகள் பறிபோவதை மாநில அரசு கண்டுகொள்ளவில்லை. இது மாநில மக்களின் நலனைப் பாதிக்கும் என்பதை உணரவில்லை.
இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மேட்டூர் அணையைத் தூர்வாரும் போராட்டம் அறிவித்த வேளையில் அரசு அதற்காக நடவடிக்கை எடுத்துள்ளது. தூர்வாரும் பணி முறைகேடு இல்லாமல் நடைபெற வேண்டும். உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநில அரசு அஞ்சுகிறது. கிராம மக்களின் குடிநீர், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு உடனடித் தீர்வுகாண உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்றார் அவர்.  கட்சியின் மாவட்டச் செயலர் த. செங்கோடன், மாவட்டத் துணைச் செயலர் ஏனாதி ஏஎல். ராசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com