கடும் வறட்சி: குடிநீர்த் தேவையை சமாளிக்கும் நகராட்சி நிர்வாகம்

கடும் வறட்சியால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், சுமார் ரூ. 50 லட்சத்தில் குடிநீர்த் திட்டப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது

கடும் வறட்சியால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், சுமார் ரூ. 50 லட்சத்தில் குடிநீர்த் திட்டப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகம்.
புதுக்கோட்டை நகரின் குடிநீர்த் தேவையை நிறைவுசெய்யும் வகையில் கடந்த 1995-ல் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது.
இதன்மூலம், திருச்சி மாவட்டம், ஜீயபுரத்திலிருந்து குழாய்கள் மூலம் புதுக்கோட்டை நகராட்சியில் கோவில்பட்டி, சந்தைப்பேட்டை ஆகிய இடங்களில் தலா 25 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட 2 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், மச்சுவாடியில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவுடன் ஒரு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்டத் தொட்டி மற்றும் பெரியார் நகர், போஸ்நகர், காந்தி பூங்கா, பூங்கா நகர், திருவப்பூர் உள்பட 9 பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நீர்த்தேக்கத் தொட்டிகளில் குடிநீர் சேமிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
புதுகை நகராட்சியின் பல்வேறு பகுதிகளில் சுமார் 30 ஆயிரம் வீடுகளுக்கும், சுமார் 550-க்கும் அதிகமான பொது இடங்களிலும் குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில், புதுகை நகராட்சியின் மக்கள்தொகை பல மடங்கு அதிகரித்துள்ளதால், கூட்டுக் குடிநீரின் அளவை அதிகரிக்கும் வகையில், திருச்சி ஜீயபுரத்தில் உள்ள நீரேற்று நிலையத்தில் நவீன கருவிகளை பொருத்துவதற்காக நகராட்சி நூற்றாண்டு விழாவுக்காக தமிழக முதல்வர் ஒதுக்கிய ரூ. 50 கோடி சிறப்பு நிதியில் இருந்து 2013-14 ஆம் ஆண்டில் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் கடந்த 1994-ல் பொருத்தப்பட்ட மின் மோட்டார்களை மாற்றி அமைப்பதற்காக ரூ. 5.23 கோடியும், அம்மையாபட்டி குடிநீர்த் திட்ட மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ. 2.80 கோடியும் செலவழித்து பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதனால், காவிரியிலிருந்து தினமும் சுமார் 1.30 கோடி லிட்டர் வரை புதுக்கோட்டைக்கு குடிநீர் கிடைக்கும் நிலை உருவானது.
இதையடுத்து, நிகழாண்டில் 140 ஆண்டுகளில் இல்லாத வறட்சியின் காரணமாக தற்போது கிடைத்து வரும் சுமார் 75 லட்சம் லிட்டர் குடிநீர் நகர மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. பிற நீர்த்தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆழ்குழாய் கிணறுகளும், சிறு மின்விசைத் தொட்டிகளும் அமைக்கப்பட்டு வருவதால், நகராட்சியின் அருகேயுள்ள ஊராட்சிப் பகுதி குடியிருப்புகளில் அவ்வப்போது ஏற்படும் குடிநீர்த் தட்டுப்பாட்டைத் தவிர வேறு எவ்வித சலசலப்பும் எழவில்லை.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் (பொ) ஜீவாசுப்பிரமணியன் கூறியது:
குடிநீர்ப் பிரச்னை தொடர்பாக ஆட்சியர் சு. கணேஷ் தலைமையில் அண்மையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், வீட்டுவசதி வாரியத் தலைவர் பி.கே. வைரமுத்து ஆகியோர் குடிநீர்த் தேவைகளை நிறைவு செய்வதற்கு முன்னுரிமை அளித்து, பணிகளை உடனுக்குடன் நிறைவேற்ற அறிவுறுத்தினர்.
அதைத்தொடர்ந்து, தற்போது அதிகரித்துள்ள குடிநீர்த் தேவையை சமாளிக்கும் வகையில், வறட்சி நிவாரண நிதியாக அரசு ஒதுக்கிய ரூ. 15 லட்சம், நகராட்சி பொது நிதி, சட்டப்பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதி உள்ளிட்ட நிதிகளில் இருந்து மொத்தம் ரூ. 50 லட்சம் ஒதுக்கப்பட்டு புதுகை நகராட்சியில் 34 வார்டுகளில் புதிய சிறு மின்விசைத் தொட்டிகளும், 3 இடங்களில் தலா ரூ. 4 லட்சம் மதிப்பில் ராட்சத ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும் பணிகளும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவடைந்து மக்களின் குடிநீர்த் தேவை தீர்க்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com