தீபத்துக்கு தயாராகும் அகல் விளக்குகள்!

கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு, புதுக்கோட்டை அருகே களி மண்ணில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்டத் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு, புதுக்கோட்டை அருகே களி மண்ணில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்டத் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கார்த்திகை மாதம் என்றாலே அனைவரது நினைவுக்கும் முதலில் வருவது தீபத்திருநாள் தான். நிகழாண்டில் வரும் டிசம்பர் 2 -ஆம் தேதி (சனிக்கிழமை) கார்த்திகை தீபம் வருகிறது. அந்நாளில் கோயில்கள், வீடுகள், வணிக நிறுவனங்கள் என அனைத்து இடங்களிலும் தீபம் ஏற்றுவது வழக்கம்.
புதுக்கோட்டை மாவட்டம், குசலாக்குடி கிராமத்தில் கார்த்திகை தீபத்துக்காக மிகப் பெரிய அளவில் அகல் விளக்குகள் தயாரிப்பை அப்பகுதி மக்கள் குடிசைத் தொழிலாகச் செய்து வருகின்றனர். களிமண்ணில் கைகளால் தயாரித்த சிறிய, பெரிய அகல் விளக்குகள் உள்ளூர் சந்தைக்கும், வெளிமாவட்டங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப் படுகின்றன.
முன்பெல்லாம் மரச்சக்கரத்தை உதவியாளர் மூலம் சுழல விட்டு, அதில் பிசைந்த களிமண் குவியலை வைத்து கையால் அகல் விளக்குகளைத் தயாரித்து வந்தனர். ஆனால், காலஓட்டத்தில் அனைத்துத் தொழில்களிலும் இயந்திரத்தின் பயன்பாடு தவிர்க்க முடியாததாகிவிட்டது.
இதற்கு மண்பாண்ட தொழிலும் விதிவிலக்கல்ல. தற்போது மின்மோட்டார் பொருத்திய சக்கரங்கள் மூலம் பல மாதிரிகளில் அகல் விளக்குகள் தயாரிக்கப்படுகிறது.
இது குறித்து, குசலாக்குடி கிராமத்தைச் சேர்ந்த மண்பாண்டத் தொழிலாளி எஸ்.எம். கருப்பையாவேளார் (60) கூறியதாவது:
40 ஆண்டுகளாக மண்பாண்டத் தொழில் செய்து வருகிறேன். சுமார் 8 மணி நேரம் வேலை செய்தால், 300 முதல் 500 அகல் விளக்குகள் வரை தயாரிக்க முடியும். பிறகு வெயிலில் உலர வைத்து, சூளையில் அடுக்கி நெருப்பில் சுட்டு எடுக்கிறோம். தற்போது மழைபெய்து, கண்மாய், குளங்களில் நீர் நிரம்பிவிட்டது. இதனால், தொழிலுக்குத் தேவையான களிமண் எடுப்பதில் சிரமம் உள்ளது. அகல் விளக்குகளைத் தயாரிக்கும் இயந்திரம் விருத்தாசலத்தில் இருக்கிறது. அதை, இலவசமாகவோ அல்லது மானியத்துடன் பெறுவதற்கு அரசு உதவி செய்ய வேண்டும்.
இயந்திரம் கிடைத்தால் அதிக எண்ணிக்கையில் அகல் விளக்குகளைத் தயாரிக்க முடியும். இப்பணி முடிந்ததும் பொங்கல் திருநாளுக்கு பானைகள் தயாரிக்கும் பணி தொடங்கும். குசலாக்குடியில் சுமார் 25 -க்கும் மேற்பட்ட தொழிலாளர் குடும்பங்கள் இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com