பயிர்க் காப்பீட்டு தொகை கோரி அறந்தாங்கியில் ஆர்ப்பாட்டம்

அறந்தாங்கியில் அதிமுக (அம்மா) அணி சார்பில் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்காப்பீட்டு நிவாரணத் தொகை வழங்கக் கோரி சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அறந்தாங்கியில் அதிமுக (அம்மா) அணி சார்பில் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்காப்பீட்டு நிவாரணத் தொகை வழங்கக் கோரி சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அறந்தாங்கி சட்டப்பேரவை உறுப்பினர் இ.ஏ.ரெத்தினசபாபதி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் பரணி இ.ஏ. கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட  தேசிய தென்னக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி. அய்யாக்கண்ணு பேசுகையில்,  மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் கஷ்டத்தை உணர்வதில்லை. அரசு ஊழியர்களுக்கு 14ஆயிரத்தி 500 கோடியை 7-ஆவது ஊதிய கமிஷன் மூலம் வழங்கிய அரசு, விவசாயிகளுக்கு 8 ஆயிரம் கோடியை
ஒதுக்கீடு செய்ய முன்வரவில்லை.
 விவசாயி விளைவிக்கும் பொருள்களின் மதிப்பு கடந்த 40 ஆண்டுகளில் சில மடங்கில் தான் உயர்ந்துள்ளது. ஆனால் அரசு ஊழியர்கள், எம்எல்ஏ, வங்கி மேலாளர்கள் சம்பளம் 250 மடங்கிலிருந்து 400 மடங்கு உயர்ந்துள்ளது.  நதிகளை இணைப்போம் எனக்கூறி வாக்கு வாங்கிய பிரதமர் தில்லியில் 200 நாள்களாக போராடிய விவசாயிகளை கண்டுகொள்ளவில்லை. அறந்தாங்கி பகுதி விவசாயிகளுக்கு பயிர் நிவாரணம் வழங்கவில்லை என்றால்  இன்னும் 15 நாட்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அங்கேயே தங்கி போராட்டம் நடத்துவோம் என்றார்.
மாவட்டச் செயலாளர் பரணி இ.ஏ.கார்த்திகேயன் பேசுகையில், அறந்தாங்கி தொகுதியில் 40 கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு முற்றிலும் காப்பீட்டு நிவாரணம் பட்டியலில் இல்லாமல் விடுபட்டுள்ளது. விரைவில் வழங்கிவிடுவதாக மாவட்ட ஆட்சியரும், வருவாய் கோட்டாட்சியரும் உறுதியளித்துள்ளனர். அவ்வாறு வழங்காவிட்டால் மாவட்ட தலைநகரில் இதைவிட மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் அறந்தாங்கி நகரச்செயலாளர் க. சிவசண்முகம்,  ஒன்றியச் செயலாளர் த. செல்வராஜ், ஆவுடையார்கோவில் ஒன்றியச் செயலாளர் சி. செல்லக்கண்ணு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com