தடையை மீறி ஆர்ப்பாட்டம் : ஜேக்டோ-ஜியோ அமைப்பினர் 1090 பேர் கைது

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை ஆட்சியரகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ஜேக்டோ-ஜியோ கூட்டமைப்பைச் சார்ந்த 570 பெண்கள் உள்பட 1090 பேரை போலீஸார் கைது செய்தனர்.

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை ஆட்சியரகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ஜேக்டோ-ஜியோ கூட்டமைப்பைச் சார்ந்த 570 பெண்கள் உள்பட 1090 பேரை போலீஸார் கைது செய்தனர்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூதிய முறையையே தொடர வேண்டும். தொகுப்பூதிய, மதிப்பூதிய, சிறப்புக் காலமுறை ஊதிய பணி முறைகளை ரத்து செய்துவிட்டு, அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜேக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் கடந்த 7ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு, பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
போராட்டத்தின் ஏழாம் நாளான வெள்ளிக்கிழமை புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் அரசின் அறிவிப்புக்காகக் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கே. நாகராஜன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் க. கருப்பையா, ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்டச் செயலர் எம். ராஜாங்கம் ஆகியோர் தலைமையில் ஜேக்டோ-ஜியோ அமைப்பினர் ஆயிரக்கணக்கானோர் திரண்டு சென்றனர்.
ஆனால், போராட்டத்துக்கு போலீஸார் அனுமதி மறுத்ததால், ஊழியர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, அனைவரும் ஆட்சியரகம் எதிரே உள்ள வீதியில் உள்ள தனியார் பள்ளி அருகே தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்டச் செயலர் ஆ. மணிகண்டன், அரசு ஊழியர் சங்க மாவட்டச்செயலர் ஆர். ரெங்கசாமி, உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைப் பொதுச் செயலர் அ. செல்வேந்திரன், 570 பெண்கள் உள்பட 1090 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இதனிடையே, உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்படி, பிற்பகலில் போராட்டத்தை தாற்காலிகமாக வாபஸ் பெறுவதாக ஜேக்டோ-ஜியோ கூட்டமைப்பு நிர்வாகிகள் அறிவித்தனர். இதையடுத்து, புதுக்கோட்டையில் கைது செய்யப்பட்ட நிர்வாகிகளை போலீஸார் விடுவித்தனர்.
இதைத் தொடர்ந்து அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பிற்பகலில் தங்கள் பணியிடங்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com