ஆலங்குடி அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 2 பேர் சாவு: கிராம மக்கள் சாலை மறியல்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கஜா புயலால் சேதமடைந்து அறுந்து கிடந்த மின்கம்பியில் இருந்து

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கஜா புயலால் சேதமடைந்து அறுந்து கிடந்த மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து திங்கள்கிழமை 2 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து, மின்வாரியத்தினரின் அலட்சியப் போக்கைக் கண்டித்தும், உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கடந்த 16 ஆம் தேதி வீசிய கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் ஆலங்குடி பகுதியில் ஆயிரக்கணக்கான மின் கம்பங்கள் முறிந்தன. தொடர்ந்து, நடைபெற்றுவரும் சீரமைப்பு பணியால் படிப்படியாக கிராமங்களுக்கு மின் இணைப்பு அளிக்கப்பட்டு வருகிறது. ஆலங்குடி அருகேயுள்ள அரையப்பட்டி பகுதிக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில், அரையப்பட்டி மேற்கு பகுதியைச் சேர்ந்த முத்துச்சாமி மனைவி சுசீலா(50). இவரது உறவினரும், அதே பகுதியைச் சேர்ந்த கருப்பையா மகன் சக்திவேல்(25) ஆகிய இருவரும் கால்நடைகளுக்கு தண்ணீர் எடுக்க அப்பகுதியில் உள்ள கிணற்றுக்கு திங்கள்கிழமை காலை சென்றுள்ளனர். அப்பகுதியில் புயலால் சேதமடைந்த மின்கம்பத்தில் இருந்து மின்கம்பி அறுந்து  
கிடந்துள்ளது. கடந்த 20 நாள்களாக மின்சாரம் இல்லாததால் இருவரும் அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து திரண்ட அப்பகுதி மக்கள், மின்வாரியத்தின் அலட்சியப்போக்கே இருவரது உயிரிழப்புக்கு காரணமெனக் கூறியும், இருவரது குடும்பத்தினருக்கும் உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் ஆலங்குடி சட்டப்பேரவை உறுப்பினர் சிவ.வீ.மெய்யநாதன் தலைமையில் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அங்குசென்ற வருவாய் கோட்டாட்சியர் டெய்சிக்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். செல்வராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி இருவரது குடும்பத்துக்கும் தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து கிராம மக்கள் கலைந்துசென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com