சத்துணவு அமைப்பாளர் நியமனத்தில் முறைகேடு: சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர் நியமனத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி

புதுக்கோட்டை மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர் நியமனத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 புதுக்கோட்டையைச் சேர்ந்த கார்த்திகா சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
 புதுக்கோட்டை மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் நியமனத்திற்காக கடந்த 2017 ஜனவரி மாதம் 31 ஆம் தேதி அறிவிப்பு வெளியானது. இதைத்தொடர்ந்து பிப்ரவரி 24 ஆம் தேதி அதற்கான நேர்முகத்தேர்வு நடைபெற்றது. ஆனால், பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. இந்நிலையில் இந்த நியமனங்களில் பல முறைகேடுகள் நடந்திருப்பதாக உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இதைத்தொடர்ந்து அவசர அவசரமாக எந்த விதிகளையும் பின்பற்றாமல் தகுதியில்லாதவர்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
 இந்நிலையில் இந்தப் பணி நியமனத்திற்காக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் அன்பானந்தம் என்னிடம் தொடர்பு கொண்டு ரூ.3 லட்சம் கொடுத்தால் சத்துணவு அமைப்பாளர் பணி வாங்கித் தருவதாக தெரிவித்தார். இதுதொடர்பாக விசாரித்தபோது புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரும், அமைச்சரின் உதவியாளரும் சேர்ந்து கொண்டு பணம் பெற்று முறைகேடான வழியில் பலருக்கு பணி நியமன ஆணை வழங்கியது தெரியவந்தது.
 சத்துணவு அமைப்பாளர் பணி நியமனத்தில் ராணுவ வீரர்களின் மனைவிகள், விதவைகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். அதற்கு மாறாக பணம் பெற்றுக்கொண்டு பலருக்கும் பணி நியமன ஆணை வழங்கியுள்ளனர். இதுதொடர்பாக  பாதிக்கப்பட்ட ஒருவர் அளித்தப் புகாரில் முகாந்திரம் இல்லை எனக்கூறி லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவினர் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இந்தப் பணி நியமன முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com