தீயணைப்புத் துறை சார்பில் பேரிடர் மீட்பு ஒத்திகை

புதுக்கோட்டையில் தீயணைப்பு துறை சார்பில்  பேரிடர் மீட்பு ஒத்திகை ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டையில் தீயணைப்பு துறை சார்பில்  பேரிடர் மீட்பு ஒத்திகை ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பேரிடர் தவிர்ப்பு தினத்தையொட்டி நடைபெற்ற பயிற்சியை ஆட்சியர் சு. கணேஷ் தொடங்கி வைத்து கூறியது:
பொதுமக்கள் பேரிடர் காலங்களில் தங்களை தற்காத்து கொள்ளும் வகையில் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மாதிரி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. இதில் புயல், வெள்ளம், நிலநடுக்கம், சுனாமி உள்ளிட்ட இயற்கை சீற்றங்களிலிருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்தும் கொள்ளும் வழிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. 
நிலநடுக்கத்தின்போது கட்டட இடிபாடுகளிலிருந்து வெளியேறுதல், தீ விபத்துகளிலிருந்து பாதுகாத்தல், தண்ணீரில் மூழ்கியோரைக் காப்பாற்றுதல், சுனாமியின்போது  தப்புதல், இடி, மின்னலின்போது பாதுகாப்பாக இருத்தல் உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகளிலிருந்து பொதுமக்கள் தங்களை காத்துக் கொள்ளும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாதிரி பயிற்சியின் மூலம் செய்து காண்பிக்கப்பட்டது என்றார்.
நிகழ்வில்  மாவட்ட தீயணைப்பு அலுவலர் செழியன், மாவட்ட வருவாய் அலுவலர் அ. ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அறந்தாங்கி :  அறந்தாங்கி, ஆவுடையார்கோவிலில்  உலக பேரிடர் தவிர்ப்பு  தினத்தை முன்னிட்டு  வெள்ளிக்கிழமை  விழிப்புணர்வு பேரணி,  தீயணைப்பு துறை  செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
அறந்தாங்கியில் நடந்த நிகழ்ச்சிக்கு வருவாய்க் கோட்டாட்சியர் க. பஞ்சவர்ணம்  தலைமை வகித்தார். வட்டாட்சியர்  க. கருப்பையா, துணை வட்டாட்சியர்  செந்தில்நாயகி, வருவாய் ஆய்வாளர்  கபாபி பேகம்  மற்றும்  அறந்தாங்கி தீயணைப்பு நிலைய அலுவலர் ப. மோகன் மற்றும் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், வருவாய் துறையினர் கலந்து கொண்ட பேரணி பள்ளியில் தொடங்கி  வட்டாட்சியரகத்தில் நிறைவுற்றது.
பின்னர் தீயணைப்பு நிலைய அலுவலர்  ப. மோகன் தலைமையிலான வீரர்கள்  பேரிடர் கால செயல் விளக்கங்களை செய்து காண்பித்தனர்.
ஆவுடையார்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு  வட்டாட்சியர் ஜமுனா தலைமை வகித்தார். தேர்தல் பிரிவு வட்டாட்சியர் அ. ஜபருல்லா, தீயணைப்பு நிலைய அலுவலர், வருவாய்த் துறையினர், பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர்  வட்டாட்சியகத்திலிருந்து  ஊர்வலமாக வந்தனர். பின்னர் தீயணைப்பு  வீரர்களின் செயல்விளக்கம் நடைபெற்றது.
பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே உள்ள கொப்பனாபட்டியில் சர்வதேச  பேரிடர் தவிர்ப்பு தினத்தையொட்டி பேரிடர் விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி வட்டாட்சியர் ஆர். பாலகிருஷ்ணன் தலைமைவகித்தார். பொன்னமராவதி தீயணைப்பு நிலைய அலுவலர் பாண்டியராஜன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் இயற்கே பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை செயல்விளக்கம் மூலம் செய்தனர். தொடர்ந்து விபத்தில்லா தீபாவளி குறித்த விழிப்புணர்வு பேரணி முக்கிய வீதிகளின் வழியே நடைபெற்றது. வருவாய் ஆய்வாளர் திலகம், கிராம நிர்வாக அலுவலர் ஹேமலதா, கொப்பனாபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கலைமகள் கல்லூரி பெண்கள் உயர்நிலைப்பள்ளி, நாராயணன் செட்டியார் உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்  பங்கேற்றனர்.
கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டை தீயணைப்புத் துறை மற்றும் வருவாய்த் துறை சார்பில் பேரிடர் மீட்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  இதுகுறித்த பேரணிக்கு வட்டாட்சியர் இ . ஆரமுததேவசேனா, தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் ரே . ஆரோக்கியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கந்தர்வகோட்டை பழைய பேருந்து நிலையத்தில் பேரிடர் கால மீட்பு பணி ஒத்திகையை  தீயணைப்பு வீரர்கள் செய்தனர். துணை வட்டாட்சியர் வி . ராமசாமி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com