"அதிக மகசூல் பெற நெல்பயிரில் வரிசைமுறை நடவுப்பணிகள் அவசியம்'

நெல்பயிரில் வரிசை முறை நடவுப்பணிகளை மேற்கொண்டால் அதிக மகசூலை பெறலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ்.

நெல்பயிரில் வரிசை முறை நடவுப்பணிகளை மேற்கொண்டால் அதிக மகசூலை பெறலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ்.
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் வட்டாரத்தில் வேளாண் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளை புதன்கிழமை நேரில் ஆய்வு செய்த ஆட்சியர் சு.கணேஷ் கூறியது: 
தமிழக அரசு வேளாண்மைத் துறை சார்பில் விவசாயிகள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, விவசாயிகள் குறைந்த செலவில் அதிக மகசூல்  பெற்று நல்ல வருமானம் கிடைக்கும் வகையில் பல்வேறு வகை மானியத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.  
இத்தகைய திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. 
அரிமளம் வட்டாரம், மிரட்டுநிலை கிராமத்தில் ஒட்டுமொத்த திருந்திய நெல் சாகுபடி திட்டத்தின் கீழ் ரூ.10,000  மானியத்தில் நடவு செய்யப்பட்டுள்ள நெல் சாகுபடி பணி, கீழப்பனையூரில் ரூ.1.50 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டட கட்டுமானப் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.
மேலும்,  சமுத்திரம் கிராமத்தில் ஒருங்கிணைந்த பண்ணை செயல் விளக்கத் திட்டத்தின் கீழ் ரூ.20,000 மானியத்தில் அமைக்கப்பட்டுள்ள பண்ணைத் திட்டப் பணி, நெல்லில் நடவு இயந்திர திட்டத்தின்கீழ் ரூ.10,000 மானியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இயந்திர நடவுப் பணி, கீழப்பணையூரில் மானிய விலையில் ரூ.74,435 மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சொட்டுநீர் பாசனத் திட்டப் பணி உள்ளிட்டவைகள் ஆய்வு செய்யப்பட்டது. 
விவசாயிகள் நெல்பயிரில் வரிசைமுறை நடவுப் பணிகளை மேற்கொள்ளும்போது அதிக மகசூல் பெறுவதுடன் பயிர்களுக்கு பாதுகாப்பு ஏற்படுகிறது. 
எனவே அதிக மகசூல் பெற விவசாயிகள் வரிசை நடவு முறையை மேற்கொள்ள வேண்டும். சொட்டுநீர் பாசனத் திட்டம்,  சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 இதன்மூலம் குறைவான நீரில் அதிக பரப்பளவில் விவசாயம் செய்யலாம். எனவே விவசாயிகள் தமிழக அரசின் வேளாண் திட்டங்களை உரிய முறையில் பயன்படுத்தி உற்பத்தியை பெருக்க வேண்டும் என்றார் ஆட்சியர்.
ஆய்வின்போது, வேளாண் இணை இயக்குநர் மனோகரன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கோமதி தங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com