தினமணி செய்தி எதிரொலி: பயன்பாட்டுக்கு வந்த பேரூராட்சி டிப்பர் லாரி

அதிராம்பட்டினம் பேரூராட்சியில் புதிதாக வாங்கப்பட்டு கடந்த 49 நாள்களாக பயன்படுத்தப்படாமல் இருந்த டிப்பர் லாரி தினமணி நாளிதழில் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து சனிக்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வந்தது.

அதிராம்பட்டினம் பேரூராட்சியில் புதிதாக வாங்கப்பட்டு கடந்த 49 நாள்களாக பயன்படுத்தப்படாமல் இருந்த டிப்பர் லாரி தினமணி நாளிதழில் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து சனிக்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வந்தது.
அதிராம்பட்டினம் பேரூராட்சியிலுள்ள 21 வார்டுகளில் அன்றாடம் சேரும் குப்பைகள் பேரூராட்சிக்கு சொந்தமான 2 டிராக்டர்கள், 1 வாடகை டிராக்டர் ஆகியவற்றின் மூலம் அப்புறப்படுத்தப்படுகிறது.
இப்பேரூராட்சியில் குப்பைகளை எடுத்துச் செல்ல தற்போது பயன்பாட்டிலுள்ள டிராக்டர்கள் மிகவும் பழுதடைந்துள்ளதால் குப்பைகளை முழுமையாக அகற்ற முடியவில்லை. மேலும், அதிரை நகரில் குடியிருப்புகள் அதிகரித்து வரும் நிலையில் ஆங்காங்கே தேங்கும் குப்பைகளை முழுமையாக அகற்ற கூடுதல் வாகனம் வாங்க வேண்டுமென பல தரப்பிலிருந்தும் பேரூராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையேற்று, 2015-16 நபார்டு வங்கியின் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் ரூ. 12.50 லட்சம் மதிப்பில் புதிதாக டிப்பர் லாரி வாங்கப்பட்டு, கடந்த மார்ச் மாதம் 11-ஆம் தேதி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.
அன்று முதல் இந்த வாகனத்தை பயன்படுத்தாமல் பேரூராட்சி நிர்வாகம் அலுவலக வளாகத்தில் பல நாள்களாக காட்சிப் பொருளாக நிறுத்தி வைத்திருப்பது பொதுமக்களை கடும் அதிருப்திக்கு ஆளாக்கியது. உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் புதிய டிப்பர் லாரியை குப்பை அகற்றும் பணிக்கு பயன்படுத்த வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து தினமணி நாளிதழில் ஏப். 15-ஆம் தேதி செய்தி வெளியானது.
இதைத் தொடர்ந்து அதிரை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் கடந்த 49 நாள்களாக நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் லாரி சனிக்கிழமை காலை முதல் பயன்பாட்டுக்கு வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com