பாபர் மசூதி இடிப்பு தினம்: இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி, தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி, தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் தஞ்சாவூர் ரயிலடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் எஸ். அகமதுஹாஜா தலைமை வகித்தார். 
இதில் பாபர் மசூதி இடிப்பு வழக்கை நியாயமாக நடத்தி விரைந்து முடிக்க வேண்டும். இந்தப் பிரச்னையில் ஆவணங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்க வேண்டும், மனிதநேய சிந்தனையாளர்கள்,
பத்திரிகையாளர்களின் படுகொலைகளைக் கண்டித்தும், பசு பாதுகாவலர்கள் பெயரில் இஸ்லாமிய, தலித் மக்களை கொலை செய்த சமூக விரோதிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க
வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் தலைமைக்கழக பேச்சாளர் ஜெய்னுலாப்தீன், மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் சரவணபாண்டியன், பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட
இஸ்லாமியர்கள் கருப்புச்சட்டை அணிந்து பங்கேற்றனர்.
இதேபோல, மனிதநேய ஜனநாயகக் கட்சி சார்பில் தஞ்சாவூர் ஆபிரகாம் பண்டிதர் சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் கபீர்அகமது தலைமை வகித்தார். மாநில
காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன், நாம் தமிழர் கட்சி நல்லதுரை, தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் அய்யனாபுரம் முருகேசன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச்
செயலாளர் மணிமொழியன், ஏஐடியுசி மாவட்ட துணைச் செயலாளர் மதிவாணன், சிபிஎம்எல் மக்கள் விடுதலை கட்சி மையக்குழு உறுப்பினர் அருண்ஷோரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பட்டுக்கோட்டையில்... தஞ்சை தெற்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் எதிரில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் சட்ட ஆதாரங்களின் அடிப்படையில் நியாயமான தீர்ப்பு வழங்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
ஆர்ப்பாட்டத்துக்கு தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் இசட். முகம்மது இலியாஸ் தலைமை வகித்தார். மாநிலப் பேச்சாளர் நெல்லை எம். மஹ்பூப் அன்சாரி, பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின்
தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் ஹாஜா அலாவுதீன், கேம்ஸ் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாநிலச் செயலர் ரியாஸ் அஹமது ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.  எஸ்.டி.பி.ஐ.
கட்சி நிர்வாகிகள் சேக் தாவூத், சாகுல் ஹமீது, அபுல் ஹசன், ரஜினிஸ், சேக் ஜலால், செய்யது முகம்மது, ஆமினா சேக் ஜலால், அமானுல்லா உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
அதிராம்பட்டினத்தில்... அதிரை பேருந்து நிலையம் அருகே தஞ்சை தெற்கு மாவட்ட மனிதநேய ஜனநாயகக் கட்சி சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் தெற்கு
மாவட்ட பொறுப்புக்குழுத் தலைவர் பேராவூரணி அப்துல் சலாம் தலைமை வகித்தார். மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ஏ.எச்.பைசல் அகமது, அதிரை பேரூர் பொருளாளர் எச். சாகுல் ஹமீது ஆகியோர்
முன்னிலை வகித்தனர். 
இதில், மாநில துணை பொதுச்செயலர் மதுக்கூர் கே. ராவுத்தர்ஷா, மனிதநேய கலாச்சாரப் பேரவை பஹ்ரைன் மண்டலச் செயலர் வல்லம் ரியாஸ் ஆகியோர் பங்கேற்று, பாபர் மசூதி வழக்கில் நியாயமான
தீர்ப்பு வழங்க வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
 முன்னதாக, அதிராம்பட்டினம் தக்வா பள்ளிவாசல் முக்கத்திலிருந்து பேரணியாக சென்றனர். அதிரை பேரூர் செயலர் எம்.ஐ. முகமது செல்லராஜா வரவேற்றார். மருத்துவரணி செயலர் சமீர் அகமது நன்றி
கூறினார்.
கும்பகோணத்தில்... பாபர் மசூதி இடிப்பைக் கண்டித்து கும்பகோணம் தலைமை அஞ்சலகம் முன் எஸ்.டி.பி.ஐ. வடக்கு மாவட்ட அமைப்பு சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் அப்துல் காதர் தலைமை வகித்தார். எஸ்.டி.பி.ஐ. மாநில பேச்சாளர் அக்பர் அலி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டத் துணைச் செயலர் மு.அ. பாரதி,  நீலப்புலிகள்
இயக்கத் தலைவர்  முஹமது அலி ஜின்னா, கும்பகோணம் மக்கள் அதிகார நகரப் பொறுப்பாளர் ஜெயபாண்டியன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
எஸ்.டி.பி.ஐ. மாவட்டப் பொதுச் செயலர் முகமது அன்சாரி, துணைத் தலைவர் ஷேக் இப்ராகிம், பொருளாளர் தஸ்லீம் அஹமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com