ஜிஎஸ்டியால் அனைத்து தரப்பினருக்கும் லாபம்

ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் என்றார் பாஜக தேசியச் செயலர் ஹெச். ராஜா.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் என்றார் பாஜக தேசியச் செயலர் ஹெச். ராஜா.
கும்பகோணத்தில் இந்திய பட்டயக் கணக்காளர் சங்கக் கிளை சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜிஎஸ்டி குறித்த கருத்தரங்கத்தில் அவர் பேசியது:
ஜிஎஸ்டியில் வர்த்தகர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கும் அம்சங்கள் நிறைய உள்ளன. ஜிஎஸ்டி வரியை பற்றி சிலர் கற்பனை செய்து கொண்டு சந்தேகத்தில் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அப்படி எதுவும் இல்லை என்பது காலப்போக்கில் தெரிய வரும்.
தொடக்கத்தில் ஆதார் அட்டை, சமையல் எரிவாயு மானியம், ஜன்தன் வங்கி கணக்கு, பணமதிப்பு நீக்கம் போன்றவை அறிமுகப்படுத்தும்போது எதிர்ப்பு எழுந்தது. ஜன்தன் வங்கி கணக்கு 28.16 கோடி பேர் புதிதாகத் தொடங்கினர். ஜிஎஸ்டி வரி விதிப்பால் மற்ற வரிகள் எதுவும் கிடையாது. வணிகர்கள் தாக்கல் செய்வது எளிமையானது.
வணிகர்கள் தங்களது இருப்பிடத்தில் இருந்தே இணையவழி மூலம் பதிவு செய்வது மட்டுமல்லாமல், கணக்கும் தாக்கல் செய்யலாம். ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டால், யாருக்கும் லஞ்சம் கொடுக்கத் தேவையில்லை.
வணிக வரித் துறையின் சோதனைச் சாவடிகளும் இருக்காது. இதன் மூலம், மத்திய அரசின் வரி வருவாய் ஒன்றரை மடங்கு அதிகரிக்கும்.
வணிகர்கள் வியாபாரத்தில் முழு கவனம் செலுத்த வசதியாக இருக்கும். நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விகிதம் இருப்பதால் வணிகர்கள், தொழிலதிபர்கள், நுகர்வோர் என அனைத்து தரப்பினருக்கும் லாபம் ஏற்படும். இதன் மூலம், அனைத்து மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த முடியும் என்றார் ராஜா. சங்கத் தலைவர் ஜெ. சடகோபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com