"காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க திமுக வலியுறுத்த வேண்டும்'

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமரிடம் திமுக வலியுறுத்த வேண்டும் என காவிரி உரிமை மீட்புக் குழு வலியுறுத்தியுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமரிடம் திமுக வலியுறுத்த வேண்டும் என காவிரி உரிமை மீட்புக் குழு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தெரிவித்திருப் பது:
திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிய கடிதத்தில், அனைத்திந்திய அளவில் ஆற்று நீர் இணைப்புத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்று இந்திய அரசை வலியுறுத்தி, தமிழர்கள் தமிழகம் தழுவிய அளவில் முழு அடைப்பு உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தி வரும் இக்காலத்தில், அக்கோரிக்கையை மடைமாற்றுவது போல அனைத்திந்திய ஆற்று நீர் இணைப்பை முன்னிறுத்துகிறார் ஸ்டாலின்.
கங்கை - காவிரி இணைப்பை அக்காலத்திலிருந்து இக்காலம் வரை உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும், ஆட்சியாளர்களும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர்.
கங்கையிலிருந்து தென்னாட்டிற்குத் தண்ணீர் கொண்டுவர வடநாட்டவர் ஒருபோதும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அதேபோல், மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா ஆறுகளிலிருந்து தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் கொண்டு வர ஒரிசா, ஆந்திரா, தெலங்கானா அரசுகளும், அம்மாநிலங்களின் மக்களும் ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.
ஏற்கெனவே இயற்கை இணைத்து ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தமிழ்நாட்டுக்கு ஓடி வந்த காவிரி, பாலாறு, தென்பெண்ணை ஆகியவற்றை சட்டவிரோதமாக அண்டை மாநிலங்கள் பறித்துக் கொண்டு, தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் வராமல் தடுத்துவிட்டன.
எனவே, ஸ்டாலின் கங்கை காவிரி இணைப்பு என்ற கானல் நீர் திட்டத்தை மறுத்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், பாலாறு, பவானி ஆறுகளில் அண்டை மாநிலங்கள் கட்டும் தடுப்பணைகளைத் தகர்த்தெறிய கோரிக்கை வைத்தும் பிரதமருக்கு புதிய மடல் எழுத வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com