காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சாவூர் ஆட்சியரகம் முன் மார்ச் 28 முதல் முற்றுகைப் போராட்டம்: காவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகம் முன் மார்ச் 28-ஆம் தேதி முதல் தொடர் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகம் முன் மார்ச் 28-ஆம் தேதி முதல் தொடர் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு அறிவித்துள்ளது.
தஞ்சாவூரில் அக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை தெரிவித்தது:
காவிரி மேலாண்மை வாரியத்தை ஒரு மாதத்துக்குள் அமைக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் 2016, செப். 9-ஆம் தேதி உத்தரவிட்டது. ஆனால், உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை எனக் கூறி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுத்துவிட்டது மத்திய அரசு. இந்நிலையில், மாநிலங்களுக்கிடையேயான தண்ணீர் தகராறு சட்டம் 1956-க்குத் திருத்தங்களை மக்களவையில் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமாபாரதி மார்ச் 15-ஆம் தேதி முன் வைத்தார். இதன் நோக்க அறிக்கையில் காவிரி தீர்ப்பாயம் கலைக்கப்பட்டு, அதன் இறுதித் தீர்ப்பு ரத்து செய்யப்படும் எனக் கூறியுள்ளார். புதிதாக ஒற்றைத் தீர்ப்பாயம் உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் பாசன மண்டலத்தில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எண்ணெய், நிலக்கரி எடுக்க வசதி செய்து தரும் வகையில், வளம் கொழிக்கும் விளைநிலங்களை பாலைவனங்களாக மாற்றி உழவர்களை நிலத்தைவிட்டும், ஊரைவிட்டும் வெளியேற்றும் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு முனைகிறது.
கர்நாடக அரசு மேக்கேதாட்டில் சட்டவிரோதமாக பெரிய அணை கட்ட ரூ. 5,912 கோடி ஒதுக்கீடு செய்து, செயலில் இறங்கியுள்ளது. இந்த அநீதிகளுக்கெல்லாம் உச்சநீதிமன்றத்தின் வழியாகப் பரிகாரம் காணலாம் என இருந்தோம். ஆனால், உச்சநீதிமன்றமும் ஏமாற்றிவிட்டது.
எனவே, மத்திய அரசு காவிரித் தீர்ப்பாயத்தைக் கலைக்கக் கூடாது. தீர்ப்பாய இறுதித் தீர்ப்பை ரத்து செய்யக்கூடாது. உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். கர்நாடகம் மேக்கேதாட்டில் அணைக் கட்டுவதைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகம் முன் மார்ச் 28-ஆம் தேதி முதல் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. இதில், பங்கேற்குமாறு அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்து வருகிறோம் என்றார் மணியரசன்.
தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலர் அய்யனாபுரம் சி. முருகேசன், விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவர் குடந்தை அரசன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் த. மணிமொழியன், ஐ.ஜே.கே. மேற்கு மாவட்டத் தலைவர் எஸ். சிமியோன் சேவியர்ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com