'வளம் காக்கும் போராட்டங்களை வளர்தெடுக்கும் சிந்தனை தேவை'

இயற்கை வளத்தைக் காக்கும் போராட்டங்களை நாம் அடுத்தக் கட்டத்துக்கு வளர்த்தெடுக்கும் சிந்தனை தேவை என்றார் அணு உலை எதிர்ப்புப் போராட்டக் குழுத் தலைவர் சுப. உதயகுமார்.

இயற்கை வளத்தைக் காக்கும் போராட்டங்களை நாம் அடுத்தக் கட்டத்துக்கு வளர்த்தெடுக்கும் சிந்தனை தேவை என்றார் அணு உலை எதிர்ப்புப் போராட்டக் குழுத் தலைவர் சுப. உதயகுமார்.
தஞ்சாவூரில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற ஓவியர் புகழேந்தியின் நானும் எனது நிறமும் - தன் வரலாறு நூல் வெளியீட்டு விழாவில் அவர் பேசியது:
காவிரியில் உரிமைக்காக இங்கு நடத்தப்படும் போராட்டங்கள் அற்புதமானவை. காவிரியில் தண்ணீர் வரவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. ஹைட்ரோ கார்பன், மீத்தேன் என பூச்சாண்டிக் காட்டுகின்றனர். இவை அனைத்தையும் நாம் இணைத்துப் பார்க்கத் தவறினால் மிகப் பெரிய வரலாற்றுப் பிழை செய்ய தவறிவிட்டவர்கள் ஆகிவிடுவோம்.
ஹைட்ரோ கார்பன் என்பது திரவ, திட, வாயு வடிவங்களில் மண்ணில் இருக்கிறது. இதை மீத்தேன், ஷேல் எரிவாயு என வெவ்வேறு பெயரில் கூறி மக்களை ஏமாற்றுகின்றனர்.
இந்தியாவில் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் ஏராளமாக இருக்கிறது. இவற்றை தோண்டி எடுக்க பொருளாதார, தொழில்நுட்ப வசதி இல்லை எனக் கூறி, தனியார் வசம் ஒப்படைத்து தாரை வார்க்கிறது மத்திய அரசு. இந்த 31 இடங்களில் 2 இடங்களை பொதுத் துறை நிறுவனங்களும், மற்ற இடங்களை வெளிநாடு, உள்நாட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களும் ஏலம் எடுத்துள்ளன.
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான அனுமதி கர்நாடகத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அப்பகுதி மக்களிடம் கருத்துக் கூட கேட்கப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் ஹைட்ரோ கார்பன் எடுப்பதாகத் தகவல் கூட அளிக்கவில்லை. அங்கு மக்கள் வெகுண்டெழுந்து போராட்டம் நடத்துகின்றனர்.
மீத்தேன் திட்டத்தை 2015 ஆம் ஆண்டில் கிடப்பில் போட்டுவிட்டு இப்போது அதை மீண்டும் செயல்படுத்தப் போவதாகத் தகவலை கசிய விட்டுள்ளது மத்திய அரசு. தஞ்சாவூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள வளத்தை எடுத்து அன்னிய நாட்டு நிறுவனங்களுக்கு விற்க மத்திய அரசுத் திட்டமிட்டுள்ளது. இதைத் தமிழக அரசும் கண்டுகொள்ளவில்லை.
இயற்கை வளங்கைளைப் பாதுகாக்கத் தவறினால் நாம் என்ன ஆவோம் என்பதை இந்த நூல் விரிவாகக் கூறுகிறது. இப்படியே போனால் நாம் என்ன ஆகும் என்ற அச்சம் நிலவுகிறது. இதன் விளைவாக ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வெடித்துச் சிதறியது. இதைத்தொடர்ந்து, நெடுவாசல், வடகாடு, தங்கச்சி மடத்தில் மக்களே தாமாக முன்வந்து போராட்டம் நடத்துகின்றனர். இந்தப் போராட்டங்களைத் தக்க வைப்பதற்கும், வளர்த்தெடுப்பது குறித்தும் நாம் சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.
இப்போராட்டங்களை அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டு செல்லப்படாவிட்டால் தஞ்சை தரணி, மேற்கு தொடர்ச்சி மலை, கடற்கரை ஆகியவை இல்லாமல் போய்விடும் என்றார் உதயகுமார்.
மூத்த வழக்குரைஞர் தஞ்சை அ. ராமமூர்த்தி தலைமை வகித்தார்.
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத் துணைவேந்தர் நல். ராமச்சந்திரன், மதிமுக துணைப் பொதுச் செயலர் துரை. பாலகிருஷ்ணன், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன், முன்னாள் அமைச்சர் சி.நா.மீ. உபயதுல்லா, பேராசிரியர்கள் அ. மார்க்ஸ், உரு. ராசேந்திரன், இரா. காமராசு, பாரத் கல்விக் குழுமச் செயலர் புனிதா கணேசன், ஓவியர் புகழேந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com