குடந்தை நகர வீதிகளை சுத்தம் செய்யும் இளைஞர் குழு

கும்பகோணம் நகரத் தெருக்களை வாரந்தோறும் சுத்தம் செய்து பராமரிக்க முடிவு செய்துள்ளனர் அப்பகுதி இளைஞர்கள்.

கும்பகோணம் நகரத் தெருக்களை வாரந்தோறும் சுத்தம் செய்து பராமரிக்க முடிவு செய்துள்ளனர் அப்பகுதி இளைஞர்கள்.
கும்பகோணத்தில் 45 வார்டுகளில் உள்ள 500-க்கும் மேற்பட்ட தெருக்களில் தேங்கும் குப்பைகளை நகராட்சியினர் தினமும் சுத்தம் செய்தாலும், தெருவாசிகள் ஒத்துழைப்பு என்பது குறைவே.
இதனால் படித்துவிட்டு வெளியூர்களில் வேலைபார்க்கும் குடந்தை இளைஞர்கள் வாரந்தோறும் சொந்த ஊருக்கு வரும்போது ஊரைச் சுத்தம் செய்ய முடிவு செய்து, கும்பகோணம் ரைசிங் என்ற அமைப்பைத் தொடங்கினர். இதன் ஒருங்கிணைப்பாளராக ஸ்ரீதர் என்பவர் உள்ளார். இக் குழுவில் தற்போது பத்து இளைஞர்கள் சேர்ந்துள்ளனர். தெருக்களைச் சுத்தம் செய்ய அனுமதி கேட்டு நகராட்சி ஆணையரை அணுகியபோது, அவரும் இந்த முயற்சியை ஊக்குவித்து தேவையான வசதிகளை செய்து தருவதாகக் கூறினாராம்.
இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை இக்குழுவினர் கும்பகோணம் குஞ்சிதபாதம் தெருவைச் சுத்தம் செய்து, குப்பைகளை அகற்றி வீட்டுச் சுவர்களில் சுண்ணாம்பு அடித்து அதில் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஓவியங்களையும் வரைந்துள்ளனர். சுத்தமாக்கப்படும் தெருவுக்கு இது நம்ம தெரு என தலைப்பிட்டு சுகாதாரத்தைப் பாதுகாக்க முடிவு செய்துள்ளதாகவும், இனி வாரந்தோறும் ஒவ்வொரு தெருவையும் சுத்தம் செய்யவுள்ளதாகவும் இக்குழுவைச் சேர்ந்த பிரகாஷ் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com