கும்பகோணம் அருகே மீத்தேன் எடுக்க முயற்சிப்பதாக கூறி கிராம மக்கள் போராட்டம்

கும்பகோணம் அருகே கதிராமங்கலத்தில் மீத்தேன் எடுக்க ஓஎன்ஜிசி முயல்வதாக கூறி வெள்ளிக்கிழமை பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்பகோணம் அருகே கதிராமங்கலத்தில் மீத்தேன் எடுக்க ஓஎன்ஜிசி முயல்வதாக கூறி வெள்ளிக்கிழமை பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கதிராமங்கலத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் ஓஎன்ஜிசி நிறுவனம் கனிம வளங்களை கண்டறிவதற்காக தனியாரின் 3 ஏக்கர் நிலத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்திருந்தது. இந்நிலையில் அந்த குழாய்களை மாற்றுவதற்காக இரு தினங்களாக தளவாடப் பொருள்கள் கொண்டு வந்து இறக்கப்பட்டன.
இந்நிலையில், கதிராமங்கலத்தை சுற்றியுள்ள கிராம மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் வெள்ளிக்கிழமையன்று அங்குள்ள அய்யனார் கோயிலில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் திரண்டனர்.
"கதிராமங்கலத்தில் குழாய்களை மாற்றுகிறோம் என்ற பேரில், அங்கு மீண்டும் ஷேல் கேஸ், மீத்தேன் போன்றவை எடுக்க உள்ளனர். விவசாயத்தை பாதிக்கும் இந்த ஆய்வை உடனடியாக நிறுத்த வேண்டும், அதற்காக கொண்டுவரப்பட்ட தளவாடப் பொருள்களை அப்புறப்படுத்த வேண்டும்' என  வலியுறுத்தி தளவாடப் பொருள்கள் வைக்கப்பட்டிருந்த ஓஎன்ஜிசி நிறுவன பகுதியை முற்றுகையிட்டனர்.
திருவிடைமருதூர் வட்டாட்சியர் கணேஷ்வரன், டிஎஸ்பி வெங்கடேசன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடையாத பொதுமக்கள் மீண்டும் கதிராமங்கலம் கடைவீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, சில தளவாடப் பொருள்கள் மட்டும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. போலீஸார் அறிவுறுத்தலின்பேரில், அப்பகுதி மக்கள் சாலை மறியலை கைவிட்டு மீண்டும் அய்யனார் கோயிலில் திரண்டனர்.
பின்னர் அய்யனார் கோயிலில் திமுக மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம்,
திருவிடைமருதூர் எம்எல்ஏ கோவி.செழியன், கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏ. செ.ராமலிங்கம்  உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் அங்கு திரண்டு பொதுமக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com