தஞ்சாவூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்: பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தல்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயிர் காப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்குமாறு விவசாயிகள் வலியுறுத்தினர்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயிர் காப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்குமாறு விவசாயிகள் வலியுறுத்தினர்.
ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத் துணைத் தலைவர் கக்கரை ஆர். சுகுமாரன் தலைமையில் சுமார் 15 விவசாயிகள் பயிர் காப்பீடு வழங்க வலியுறுத்தி மனு அளித்தனர். பின்னர், வெளிநடப்பு செய்த இவர்கள் ஆட்சியரகம் முன் மெழுகுவர்த்தி ஏற்றப்பட்ட சட்டிகளைத் தரையில் போட்டு உடைத்து முழக்கங்கள் எழுப்பினர்.
பின்னர் சுகுமாரன் தெரிவித்தது:
2015-16 ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டுத் தொகை இதுவரையில் கிடைக்கவில்லை. இதேபோல, 2016-17 ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டுத் தொகையும் கிடைக்கப் பெறவில்லை. விவசாயிகளின் வாழ்வாதாரம் என்ற விளக்கு அணைவதை உணர்த்தும் விதமாக மெழுகுவர்த்தி ஏற்றப்பட்ட சட்டிகளை உடைத்தோம். விவசாயிகளின் வயிற்றில் அடிக்காமல் காப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்றார் சுகுமாரன்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:  மதுக்கூர் ஏ.பி. சந்திரன்: நீர் ஊற்றுப் பார்ப்பதற்கு ஒருவர்தான் உள்ளார். ரூ. 500 கட்டணம் செலுத்தினாலும், போக்குவரத்து செலவு ரூ. 1,500 வரை விவசாயிகளே செய்ய வேண்டியுள்ளது. இந்தச் செலவையும் அரசே ஏற்க வேண்டும்.
புனல்வாசல் வி.ஏ. சவரிமுத்து: வேளாண் விளைபொருள்களுக்கு ஆண்டுதோறும் பயிர் காப்பீடு செய்யப்படுவதுபோல, தென்னை மரங்களுக்கும் ஆண்டுதோறும் காப்பீடு செய்ய விவசாயிகளால் இயலாது. எனவே, நீண்டகால தவணையாக ஒரே தவணையில் காப்பீடு செய்ய அனுமதிக்க வேண்டும்.
தோழகிரிப்பட்டி பி. கோவிந்தராஜ்: கரும்பு சாகுபடிப் பரப்பளவு குறைந்து வருகிறது. எனவே, கரும்பு விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக விதை கரும்பு உள்ளிட்ட மானியங்கள் வழங்கப்பட வேண்டும்.
ஆட்சியர்: விவசாயிகளின் தேவை குறித்து தெரிவித்தால் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
ராயமுண்டான்பட்டி வெ. ஜீவகுமார்: தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட வறட்சி நிவாரணத் தொகை இன்னும் பல பகுதிகளில் வழங்கப்படவில்லை. பூதலூர் வட்டத்தில் ராயந்தூர், பாதிரக்குடி, அய்யனாபுரம், தொண்டராயம்படுகை ஆகிய கிராமங்களுக்கு இன்னும் வறட்சி நிவாரணம் கிடைக்கவில்லை. எனவே, மறு ஆய்வு செய்து வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்.
பாச்சூர் த. புண்ணியமூர்த்தி: குறுகிய காலக் கடன்கள்கள் நீண்ட காலக் கடன்களாக மாற்றப்பட்டுள்ளது. இதுபோல, நகைக்கடனும் நீண்ட காலக் கடனாக மாற்றப்பட்டாலும், நகைகளை வங்கிகள் திரும்பத் தரவில்லை. இதுதொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எஸ். புதூர் பாஸ்கர்: வறட்சி நிவாரணத்துக்கான கிராம நிர்வாக அலுவலரின் சான்று வழங்கியும் இன்னும் நிவாரணத் தொகை கிடைக்கவில்லை.


ஜூனில் காப்பீட்டு தொகை: ஆட்சியர்
"மாவட்டத்தில் 95,250 விவசாயிகள் பயிர் காப்பீட்டுக்காக ரூ. 8.25 கோடி பிரீமியம் செலுத்தியுள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 3,032 இடங்களில் பயிர் அறுவடை சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆவணங்களை காப்பீட்டு நிறுவனத்திடம் அளித்துவிட்டோம். அவை பரிசீலனையில் உள்ளன. ஜூன் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் பயிர் காப்பீட்டுத் தொகை கிடைக்க வாய்ப்புள்ளது.
அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் ரூ. 30 கோடிக்கு வங்கிக் கடன் விரைவில் பெற்று அனைத்து விவசாயிகளுக்கும் ஆதார விலை வழங்கப்படும். கிராம நிர்வாக அலுவலரின் சான்று பெற்று வந்தால் அடுத்த 24 மணிநேரத்துக்குள் ஏரி, குளங்களில் மண் எடுத்துக் கொள்ளலாம்' என்றார் ஆட்சியர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com