"காவிரி உரிமைக்காக மக்கள் திரள் போராட்டங்கள்'

காவிரி உரிமைக்காக மக்கள் திரள் போராட்டங்களைப் பரவலாக்குவது என காவிரி உரிமை மீட்புக் குழு முடிவு செய்துள்ளது.

காவிரி உரிமைக்காக மக்கள் திரள் போராட்டங்களைப் பரவலாக்குவது என காவிரி உரிமை மீட்புக் குழு முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூரில் இக்குழு சார்பில் காவிரிக் காப்பு மாநாடு வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
தமிழ்நாட்டுக்கான காவிரி நீரைத் தடுத்ததால்,  12 மாவட்டங்களில் 24.50 லட்சம் ஏக்கர் பாசனப் பரப்புப் பாலைவனமாக்கப்பட்டுள்ளது. மேலும், 20 மாவட்டங்களில் குடிநீரைப் பறித்து வாழ்வுரிமையைக் கேள்விக்குறியாக்கியுள்ள கர்நாடகத்துக்கு பாஜக துணை நிற்கிறது. இந்தியாவை ஆளும் பாஜக தலைமை தனது மத்திய அதிகாரத்தை நடுநிலையுடன் நீதி தவறாமல் செயல்படுத்த வேண்டும்.
 உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசுக் கோரியுள்ளபடி 264 டி.எம்.சி. காவிரி நீரைத் தமிழ்நாட்டுக்குக் கர்நாடகம் மாதவாரியாகத் திறந்துவிட முழு அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்குமுறைக் குழுவையும் உடனடியாக அமைக்க வேண்டும். இதுதொடர்பாக மத்திய அரசுக்குத் தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
அரசியல், சூழலியல், பொருளியல் என அனைத்து வகைகளிலும் பெரும் பேரழிவை ஏற்படுத்தும் ஆறுகள் இணைப்புப் பரப்புரையைப் புறந்தள்ளிவிட்டு, தமிழ்நாட்டின் ஆற்று நீர் உரிமையை மீட்கவும், எஞ்சியுள்ள ஆறுகளையும் அவற்றில் நடக்கும் மணல் கொள்ளை மற்றும் மனித ஆக்கிரமிப்புகளைத் தடுத்து ஆறுகளைப் பாதுகாக்கவும், அந்தந்த பகுதி சார்ந்த மக்கள் இயக்கங்களைக் கட்டமைக்க வேண்டும்.
மத்திய அரசின் வஞ்சகத்தால் காவிரி நீர் மறுக்கப்பட்ட நிலையில், பாலைவனம்போல் உருமாறி வரும் காவிரிப் படுகையில் எஞ்சியுள்ள நிலத்தடி நீரையும் நஞ்சாக்கி, ஆங்காங்கே நடந்து வரும் சிறு அளவிலான வேளாண்மையையும் பாழ்படுத்தும் வகையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் செயல்பட்டு வருகிறது. எனவே, காவிரிப் படுகையை விட்டு ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும். மேலும் காவிரிப் படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும்.
விவசாயிகளின் வாழ்வுரிமைப் போராட்டங்கள் அனைத்தையும் ஒருங்கிணைந்து முன்னெடுக்க வேண்டும். தொடர்ந்து கூடுதலான மக்கள் பங்கேற்கும் அறப்போராட்டங்களைப் பரவலாக்குவோம் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலர் அய்யனாபுரம் சி. முருகேசன் தலைமை வகித்தார்.
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் த. மணிமொழியன், விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவர் குடந்தை அரசன், ஐ.ஜே.கே. மேற்கு மாவட்டத் தலைவர் ச. சிமியோன் சேவியர்ராஜ், மூத்தப் பொறியாளர் சங்க மாவட்டத் தலைவர் இரெ. பரந்தாமன், தாளாண்மை உழவர் இயக்க நிறுவனத் தலைவர் கோ. திருநாவுக்கரசு, சமவெளி விவசாயிகள் சங்கத் தலைவர் சு. பழனிராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com