உப்பு சத்யாகிரக பாத யாத்திரை தம்பதியினர் தஞ்சாவூருக்கு வருகை

உப்பு சத்யாகிரக யாத்திரை மேற்கொள்ளும் மதுரையைச் சேர்ந்த தம்பதியினர் தஞ்சாவூருக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தனர்.

உப்பு சத்யாகிரக யாத்திரை மேற்கொள்ளும் மதுரையைச் சேர்ந்த தம்பதியினர் தஞ்சாவூருக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தனர்.
மதுரை மாவட்டம், டி. ஆண்டிப்பட்டி பங்களா பகுதியைச் சேர்ந்த தம்பதியரான அகில இந்திய காந்திய இயக்கத் தேசிய ஒருங்கிணைப்புச் செயலர்கள் எம். கருப்பையா (47) - கே. சித்ரா (41) திருச்சி தலைமை அஞ்சலகப் பகுதியில் இருந்து உப்பு சத்யாகிரக நினைவு பாத யாத்திரையை ஏப். 13-ம் தேதி தொடங்கினர். வேதாரண்யம் நோக்கிச் செல்லும் இத்தம்பதியர் ஸ்ரீரங்கம், கல்லணை வழியாக ஞாயிற்றுக்கிழமை திருவையாறுக்கும், பின்னர் தஞ்சாவூருக்கும் வந்தனர்.
இதுகுறித்து கருப்பையா - சித்ரா தெரிவித்தது: மத்திய அரசு 2005 ஆம் ஆண்டு 75-வது ஆண்டு உப்பு சத்தியாகிரக பவள விழா தண்டி யாத்திரையை நடத்தியது. இதில், மும்பையில் உள்ள மகாத்மா காந்தி அறக்கட்டளை சார்பில் முக்கிய நிர்வாகியான காந்தியின் கொள்ளுப் பேரன் அ. துசார் காந்தி தலைமையிலான குழுவினர் எங்களைத் தேர்வு செய்தனர். இதையடுத்து, அந்த யாத்திரையில் கலந்து கொண்டோம். துசார் காந்தி வேண்டுகோளின்படி திருச்சி முதல் வேதாரண்யம் வரை பாத யாத்திரை செல்கிறோம். வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு இடத்தை ஏப். 30-ம் தேதி சென்றடைய உள்ளோம். கடந்த பிப்வரி மாதம் குஜராத் மாநிலம் வல்சாட் நகரத்தில் இருந்து காந்தியின் ஆசிரமம் உள்ள சபர்மதி வரை 500 கி.மீ. தொலைவுக்கு 22 நாட்கள் பாத யாத்திரை சென்றோம். அடுத்து, 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 89-வது உப்பு சத்யாகிரக தண்டி யாத்திரைக்கு நாங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளோம் என்றனர். இவர்களுக்கு தஞ்சாவூரில் காந்தி இயக்கத் தலைவர் ஆர். மோகன், நிர்வாகிகள் இராம. சந்திரசேகரன், எம்.ஆர். ரவி, அப்துல்கபார்கான், பக்கிரிசாமி உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com