அறுவடை இயந்திரத்துக்குக் கூடுதல் வாடகை: விவசாயிகள் அவதி

தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் அறுவடை இயந்திரத்துக்குக் கூடுதல் வாடகை நிர்ணயிக்கப்படுவதால், விவசாயிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் அறுவடை இயந்திரத்துக்குக் கூடுதல் வாடகை நிர்ணயிக்கப்படுவதால், விவசாயிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
மாவட்டத்தில் சம்பா, தாளடியில் ஏறத்தாழ 1.23 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டது. இதில், முன் பட்டத்தில் பயிரிடப்பட்ட சம்பா சாகுபடியில் இதுவரை கிட்டத்தட்ட 7,500 ஹெக்டேரில் அறுவடை நிறைவடைந்துள்ளது. பொங்கல் திருநாளுக்குப் பிறகு அறுவடைப் பணிகள் முழு வீச்சை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், முன் பட்டத்திலேயே அறுவடை இயந்திரத்துக்கான வாடகை அதிகமாக வசூலிக்கப்படுகிறது. சங்கிலிச் சக்கரத்துடன் கூடிய அறுவடை இயந்திரத்துக்கு மணிக்கு ரூ. 2,000 முதல் ரூ. 2,200 வரையும், டயர் சக்கரம் உள்ள இயந்திரத்துக்கு மணிக்கு ரூ. 1,600 முதல் 1,800 வரையும் நிர்ணயிக்கப்படுகிறது என்றும், கடந்த ஆண்டை விட இது மிக அதிகம் எனவும் பொன்னவராயன்கோட்டை வா. வீரசேனன் தெரிவித்தார்.
டெல்டா மாவட்டங்களில் அறுவடை இயந்திரங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. எனவே, ஈரோடு, சேலம், கடலூர் மாவட்டங்களில் இருந்துதான் டெல்டா மாவட்டங்களுக்கு அறுவடை இயந்திரங்கள் கொண்டு வரப்படுகின்றன. ஆனால், ஆண்டுதோறும் சம்பா பருவ அறுவடையின்போது இயந்திரத்துக்கான வாடகை அதிகமாக நிர்ணயிக்கப்படுவதாகப் புகார்கள் இருந்து வருகின்றன. 
வேளாண்மைப் பொறியியல் துறையில் நெல் அறுவடை இயந்திரத்துக்கான வாடகையாகக் கடந்த ஆண்டு சங்கிலிப் பொருத்தப்பட்ட வண்டிக்கு மணிக்கு ரூ. 1,415-ம், டயர் வண்டிக்கு ரூ. 875-ம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இத்துறையில் இயந்திரங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. எனவே, தனியார் வாடகை இயந்திரங்களின் மூலம் அறுவடை செய்ய வேண்டிய நிலை விவசாயிகளுக்கு உள்ளது.
எனவே, கடந்த ஆண்டுதான் கூடுதல் கட்டணத்தைக் கட்டுப்படுத்த அறுவடை இயந்திர உரிமையாளர்கள், விவசாயிகள், அரசு அலுவலர்கள் ஆகியோர் கொண்ட முத்தரப்புக் கூட்டத்தை மாவட்ட நிர்வாகம் நடத்தியது. இதில், சங்கிலிப் பொருத்தப்பட்ட வண்டிக்கு மணிக்கு ரூ. 1,800-ம், டயர் வண்டிக்கு ரூ. 1,150-ம் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டது.
ஆனால், நிகழாண்டு அறுவடைப் பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இன்னும் முத்தரப்புக் கூட்டம் நடத்தப்படவில்லை. எனவே அறுவடை இயந்திரத்துக்கான வாடகை அதிகரித்து வருகிறது. 
இதுகுறித்து காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர் அம்மையகரம் ஏ.கே.ஆர். ரவிச்சந்தர் தெரிவித்தது:
வெளி மாவட்டங்களில் வரும் அறுவடை இயந்திரங்கள் இடைத்தரகர்கள் மூலம்தான் கிடைக்கிறது. எனவே, இடைத்தரகர்களால் வாடகை அதிகமாகி வருகிறது. இப்போது, சில இடங்களில் சங்கிலிப் பொருத்தப்பட்ட வண்டிக்கு ரூ. 2,600 வரையும், டயர் வண்டிக்கு ரூ. 2,300 வரையும் வாடகை நிர்ணயிக்கப்படுகிறது. ஆண்டுதோறும், அறுவடை இயந்திரத்துக்கான கட்டணம் அதிகரித்து வருவதால் வேளாண்மைப் பொறியியல் துறையில் இயந்திரங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துமாறு வலியுறுத்துகிறோம். ஆனால், அறுவடைப் பணிகள் உச்சக்கட்டத்தை எட்டும்போது வெளி மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்படுகிறது. அதுவும் போதுமானதாக இருப்பதில்லை என்பதால், வழக்கம்போல தனியாரிடம்தான் அணுகும் நிலை உள்ளது. எனவே, கூடுதல் கட்டணத்தில்தான் அறுவடை செய்யும் நிலை உள்ளது. ஆண்டுக்கு 3 வண்டிகள் வீதம் வாங்கி இருந்தால்கூட தன்னிறைவு பெற்றிருக்கலாம் என்றார் ரவிச்சந்தர்.
ஏற்கெனவே, நெல் சாகுபடியில் செலவு அதிகரித்து வருகிறது. ஏக்கருக்கு ஏறத்தாழ ரூ. 25,000 செலவாகிறது. இதில், நல்ல மகசூல் கிடைத்தால் மட்டுமே சுமார் ரூ. 10,000 லாபம் கிடைக்கும். மகசூல் குறைந்தால் ரூ. 5,000 முதல் ரூ. 6,000 வரை லாபம் கிடைக்கும். இதிலும், அறுவடை இயந்திரத்துக்கான வாடகை அதிகரிக்கும்போது லாபமும் குறைந்துவிடும். எனவே, ஒருபோக சாகுபடியில் கிடைக்கும் வருவாயிலும் இழப்பைச் சந்திக்கும் விவசாயிகளுக்கு அறுவடை இயந்திர வாடகைக் கட்டண உயர்வு பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் முத்தரப்புக் கூட்டத்தை நடத்தி கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் விவசாயிகள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com