ரூ.2.77 லட்சம் லஞ்சப் பண விவகாரம்: தஞ்சாவூர் மண்டல போக்குவரத்து துணை ஆணையர் உள்பட 2 பேர் மீது வழக்கு

தஞ்சாவூர் மண்டல போக்குவரத்து துணை ஆணையர் எஸ்.கே.எம். சிவக்குமரன் உள்பட 2 பேர் மீது தஞ்சாவூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தஞ்சாவூர் மண்டல போக்குவரத்து துணை ஆணையர் எஸ்.கே.எம். சிவக்குமரன் உள்பட 2 பேர் மீது தஞ்சாவூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தஞ்சாவூரில் ஆட்சியரகம் அருகே தஞ்சாவூர் வட்டார போக்குவரத்து அலுவலக மாடியில் இயங்கி வரும் தஞ்சாவூர் மண்டல போக்குவரத்து துணை ஆணையர் அலுவலகத்துக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வியாழக்கிழமை கணிசமான தொகை லஞ்சமாக வழங்கப்படவுள்ளதாக கிடைத்த தகவலின்படி அங்கு வந்து மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு போலீஸார், மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் உள்ளிட்டோர்,  ஆய்வுக்கூட்டம் முடிந்து சந்தேகப்படும்படி கட்டு கட்டாக பணத்துடன்  சென்ற ஒரு நபரை பிடித்து விசாரித்தனர்.
அவர் மீது  வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில் அவர்,  அருகிலுள்ள தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளி நடத்தி வரும் சங்கிலி (43) என்பதும், தஞ்சாவூர் மண்டல போக்குவரத்து அலுவலகத்துக்கு உள்பட்ட கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலிருந்து பொங்கல் பண்டிகைக்காக வழங்கப்பட்ட ரூ.2.77 லட்சம் பணத்தை சேகரித்து மண்டல போக்குவரத்து துணை ஆணையருக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார்,  மண்டல போக்குவரத்து துணை ஆணையர் எஸ்.கே.எம். சிவக்குமரன் மீது அரசு ஊழியர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மற்றவர்களிடம் லஞ்சம் வாங்கியதாகவும், லஞ்சம் வாங்க பிறரைத் தூண்டியதாகவும் என ஊழல் தடுப்பு சட்டம் 8 , 10, 13 (1) பி, 13(1) டி, 13 (2) ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ரூ.95 லட்சம் சிக்கியது...: இதனிடையே வியாழக்கிழமை இரவு தஞ்சை ஊழல் தடுப்பு பிரிவு போலீஸார் மண்டல போக்குவரத்து துணை ஆணையர் அலுவலகம் எதிரே சங்கிலி நடத்தி வந்த தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் ஆய்வு நடத்திய போது, அங்கு ரூ.95 லட்சத்துடன் 3 நபர்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், மூவரும் மதுரையைச் சேர்ந்தவர்கள் என்பதும், பணத்தை அவர்கள் இடம் வாங்குவதற்காக எடுத்து வந்ததாகவும், முன்னுக்குப் பின் முரணாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து தஞ்சாவூர் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸார்,  இத்தகவலை திருச்சி வருமானவரித்துறை அலுவலகத்திற்கு தெரிவித்தனர். அதன் பேரில் திருச்சியிலிருந்து வந்த வருமான வரித்துறை அலுவலர்கள் மூவர் பணம் வைத்திருந்த 3 பேரையும் திருச்சிக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com