"தமிழக பல்கலைக்கழகங்களில் மொழிபெயர்ப்பு செய்யப்படுவதில்லை'

தமிழக பல்கலைக்கழகங்களில் மொழிபெயர்ப்பு செய்யப்படுவதில்லை என சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளர் சா. கந்தசாமி வருத்தம் தெரிவித்தார்.

தமிழக பல்கலைக்கழகங்களில் மொழிபெயர்ப்பு செய்யப்படுவதில்லை என சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளர் சா. கந்தசாமி வருத்தம் தெரிவித்தார்.
 எழுத்தாளர் சி.எம். முத்துவின் மிராசு என்ற நாவல் வெளியீட்டு விழா தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில், நாவலின் முதல் பிரதியை முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம் வெளியிட, அதை யாகப்பா கல்விக் குழுமத்தின் தாளாளர் ஏ. எட்வர்ட் ஆரோக்கியராஜ் பெற்றுக் கொண்டார்.
இதில் சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளர் சா. கந்தசாமி பேசியது:
18-ஆம் நூற்றாண்டு வரை தமிழ் எழுத்துகளில் மெல்லினம்,  வல்லினம் வேறுபாடு கிடையாது. எழுத்துகளில் புள்ளி கிடையாது. இவை வளர்ச்சியடைந்து தற்போதுள்ள எழுத்துமுறைகள் பயன்பாட்டுக்கு வந்தன.  இதனை பல்வேறு ஆராய்ச்சி மற்றும் தமிழ்ப் புத்தகங்கள் மூலம் அறியலாம். இன்றைய காலகட்டத்தில் செல்லிடப்பேசி,  தொலைக்காட்சிகளின் தாக்கம் காரணமாக புத்தகம் படிப்பதற்கு நேரமில்லை என பலர் கூறுகின்றனர்.
 இதுபோன்ற காரணங்களை கூறாமல் புத்தகங்கள் படிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். ஐரோப்பிய நாடுகளில் 3 வயது முதலே புத்தகங்கள் வாசிப்பதை ஊக்குவிக்கின்றனர். அங்கே எல்லாம் புத்தகம் வாசிப்பதை ஆர்வம் மிகுந்ததாக மேற்கொள்கின்றனர். மதிப்பெண்கள் வாங்குவது மட்டும் வாசிப்பல்ல;  உங்களை நீங்கள் உணர்ந்துகொள்ள உதவுவதுதான் வாசிப்பு.
புத்தர் மஹதி மொழியைத்தான் பேசியுள்ளார். அதற்கு எழுத்து கிடையாது. புத்தரின் சீடர்களான ஆனந்தன் உள்ளிட்டோர்தான் புத்தரின் அருளுரைகளை பாலி மொழியில் எழுதி,  உலக மக்களுக்கு தெரியப்படுத்தினர். தொடர்ந்து இது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டதால்தான் புத்தரின் அருளுரைகள் உலக மக்கள் அனைவருக்கும் சென்றடைந்தது.
ஆனால்,  தமிழக பல்கலைக்கழகங்களில் மொழிபெயர்ப்பு என்பதே இல்லை. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் பல்வேறு மொழிகளுக்கு என பிரிவுகள் உள்ளன. அங்கு தங்களது மொழியைத் தவிர, வேறு எதையும் படிப்பதில்லை. தமிழின் சிறந்த நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்றார் அவர்.
முன்னதாக, விழாவில் தஞ்சாவூர் அனன்யா பதிப்பகத்தின் வியாகுலன் வரவேற்றார். இதில் எழுத்தாளர்கள் நா. விசுவநாதன்,  தஞ்சாவூர் கவிராயர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிறைவில் கவிஜீவன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com