தமிழகத்தில் முதல்முறையாக கும்பகோணத்தில் புதை சாக்கடை அடைப்புகளை எடுக்க ரோபோ'

கும்பகோணம் நகராட்சியில் புதை சாக்கடை அடைப்புகளை எடுக்க தானியங்கி இயந்திரம் (ரோபோ) சனிக்கிழமை முதல் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

கும்பகோணம் நகராட்சியில் புதை சாக்கடை அடைப்புகளை எடுக்க தானியங்கி இயந்திரம் (ரோபோ) சனிக்கிழமை முதல் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் நகராட்சியில் 2008-09ஆம் ஆண்டு முதல் புதை சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 5,309 மேன்ஹோல் எனப்படும் ஆளிறங்கும் குழாய்கள், 125 கி.மீட்டர் நீளத்திற்கு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் வழியே 19,421 வீட்டு இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை எடுக்க, தவிர்க்க இயலாத நேரங்களில் துப்புரவுப் பணியாளர்கள் குழாய்களில் இறங்கி சுத்தம் செய்வதால், விஷவாயு தாக்கி உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்கும் வகையில் புதை சாக்கடைகளில் துப்பரவுத் தொழிலாளிகள் இறங்கி சுத்தம் செய்யக்கூடாது என உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், அதற்கான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. ஆனாலும் புதை சாக்கடை குழாய்களில் அவ்வப்போது அடைப்பு ஏற்படுவது இயல்பாகி வருகிறது. இந்த அடைப்புகளை மனிதனைக் கொண்டு அகற்றுவதைத் தவிர்க்கும் நோக்கில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த விமல் கோபிநாத் தலைமையிலான பொறியாளர் குழுவினர் உருவாக்கியுள்ள தானியங்கி இயந்திரம் புதை சாக்கடை குழாய்களில் உள்ள அடைப்புகளை அகற்றும் பணியை மேற்கொள்கிறது. இந்த இயந்திரத்தை பயன்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் மேற்கண்ட இயந்திரத்தை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், தனது சமூகப் பங்களிப்பு நிதியின் கீழ் ரூ.9.44 லட்சம் மதிப்பில் வாங்கி கும்பகோணம் உதவி ஆட்சியர் எம்.பிரதீப்குமார் மூலம் கும்பகோணம் நகராட்சிக்கு அண்மையில் வழங்கியது.
இந்த இயந்திரத்தை நகராட்சி நிர்வாக ஆணையர் கோ.பிரகாஷ் கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி சந்திப்பில் சனிக்கிழமை தொடக்கி வைத்தார்.இதுகுறித்து கும்பகோணம் நகராட்சி ஆணையர் உமாமகேஸ்வரி கூறியது: கும்பகோணம் நகராட்சியில் புதை சாக்கடை குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் முன்பு தவிர்க்க முடியாத சூழலில் பாதுகாப்பு கவசங்களோடு தொழிலாளர்கள் இறங்கி சுத்தம் செய்தனர். இதனைத் தவிர்க்க கேரள மாநிலத்திற்கு அடுத்ததாக தமிழகத்தில் முதல் முறையாக கும்பகோணம் நகராட்சியில் தான் ரோபோ இயந்திரத்தை பயன்படுத்த உள்ளோம்.
6 கேமிராக்களுடன், 60 கிலோ எடையுடன் கூடிய இந்த இயந்திரம், பூமியின் மேற்பரப்பை கண்காணித்து, 6 மீட்டர் ஆழத்துக்கு சென்று குழாய் அடைப்புகளை சீர்படுத்தும். இந்த இயந்திரத்தை இயக்குவதற்கு நகராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு ஒரு மாதம் பயிற்சியளிக்கப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com