கொடிநாள் வசூல் தொடக்கம்

படை வீரர்களுக்கான கொடிநாள் வசூலை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே கடலூரில் வியாழக்கிழமை தொடக்கி வைத்தார்.

படை வீரர்களுக்கான கொடிநாள் வசூலை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே கடலூரில் வியாழக்கிழமை தொடக்கி வைத்தார்.
 முப்படைகளிலும் பணிபுரியும் வீரர்களின் தியாகம், வீரச் செயல்களைப் போற்றிடும் பொருட்டு படைவீரர் கொடிநாள் விழா ஆண்டுதோறும் டிசம்பர் 7-ஆம் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு படைவீரர் கொடிநாள் உண்டியல் வசூலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தொடக்கி வைத்தார்.
 இதையடுத்து, மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 16 முன்னாள் படைவீரர்கள், அவர்களைச் சார்ந்தோரின் குழந்தைகளுக்கு கல்வி நிதியுதவியாக ரூ.2.43 லட்சத்தையும், 2016-ஆம் ஆண்டில் மாவட்டத்தில் கொடிநாள் அதிகம் வசூல் செய்த 24 துறை அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் ஆட்சியர் வழங்கினார்.
 பின்னர் அவர் பேசியதாவது: கடலூர் மாவட்டத்துக்கு சென்ற ஆண்டு அரசு நிர்ணயித்த கொடிநாள் வசூல் இலக்கு ரூ.43.46 லட்சத்தை விஞ்சி ரூ.54.16 லட்சம் வசூலிக்கப்பட்டது. நிகழாண்டுக்கு மாவட்டத்துக்கு கொடிநாள் வசூல் இலக்காக ரூ.47.80 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை விடக் கூடுதலாக கொடிநாள் வசூலை அனைத்து துறை அலுவலர்களும் செய்துதர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
 நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, கடலூர் சார்-ஆட்சியர் ஜானிடாம் வர்க்கீஸ், முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் லெப்டினட் கர்னல் (ஓய்வு) வே.அருள்மொழி, முப்படைவீரர் வாரிய உப தலைவர் ஆனந்த், முன்னாள் படைவீரர் நல அலுவலகக் கண்காணிப்பாளர் ஆயிஷா பேகம், நல அமைப்பாளர் விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com