பேச்சுவார்த்தையில் உடன்பாடு: போராட்ட அறிவிப்பு வாபஸ்

பண்ருட்டி ரயில்வே மேம்பாலப் பணியை துரிதப்படுத்தக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அறிவித்த போராட்டம்,

பண்ருட்டி ரயில்வே மேம்பாலப் பணியை துரிதப்படுத்தக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அறிவித்த போராட்டம், அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து வாபஸ் பெறப்பட்டது.
 பண்ருட்டி ரயில்வே மேம்பாலப் பணியை விரைந்து முடிக்க வேண்டும். இருபுறமும் சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும். இதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
 குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில்வே கேட் அருகே வியாழக்கிழமை நாற்று நடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர்.
 இதையடுத்து, மாவட்ட வருவாய் அலுவலர் விஜயா மேம்பாலத்தை புதன்கிழமை நேரில் பார்வையிட்டார். பின்னர், மேம்பாலப் பணியை விரைவுப்படுத்துவதாகவும், வட்டாட்சியர் தலைமையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளுமாறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை கேட்டுக்கொண்டார். அதன்பேரில் வட்டாட்சியர் விஜய்ஆனந்த் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளர் சிவாஜி, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) வெங்கடாஜலம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் உதயக்குமார், நகரச் செயலர் உத்திராபதி, மாவட்டக்குழு உறுப்பினர் கிருஷ்ணன், நெல்லிக்குப்பம் பகுதிச் செயலர் ஜெயபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 இதில், ரயில்வே மேம்பாலப் பணியை ஜனவரி மாதம் முதல் வாரத்தில் முடித்து போக்குவரத்துக்கு திறக்க நடவடிக்கை எடுப்பதாகவும், சர்வீஸ் சாலை சீரமைக்கப்படும் என்றும் நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளர் சிவாஜி தெரிவித்தார். சர்வீஸ் சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் 10 நாள்களில் முடிவுற்று, உரிய இழப்பீடு வழங்கப்படும் என வட்டாட்சியர் தெரிவித்தார்.
 ரயில்வே நிலைய சாலை வெள்ளிக்கிழமை சீரமைக்கப்படும், வாலாஜா வாய்க்காலில் விரைவில் புதிய பாலம் கட்டப்படும் என ஆணையர் வெங்கடாஜலம் தெரிவித்தார்.
 இதையடுத்து, வியாழக்கிழமை நடைபெற இருந்த நாற்று நடும் போராட்டம் கைவிடப்பட்டது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com