மணல் அள்ள குவாரி திறக்கக் கோரி மாட்டு வண்டித் தொழிலாளர்கள் போராட்டம்

மாட்டு வண்டிகளில் மணல் அள்ளுவதற்கு குவாரி திறக்கக் கோரி, விருத்தாசலத்தில் தொழிலாளர்கள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாட்டு வண்டிகளில் மணல் அள்ளுவதற்கு குவாரி திறக்கக் கோரி, விருத்தாசலத்தில் தொழிலாளர்கள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வந்த மணல் குவாரிகள் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், விருத்தாசலம் மணிமுக்தாற்றில் மணல் அள்ளி வந்த மாட்டு வண்டித் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மாட்டு வண்டிகளில் மணல் அள்ளுவதற்கு குவாரிகளை திறக்க வேண்டுமென கடந்த சில வாரங்களாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
 இந்த நிலையில், வியாழக்கிழமை பாலக்கரை உழவர் சந்தை அருகே ஜனநாயக மாட்டு வண்டித் தொழிலாளர்கள் சங்கத்தினர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக வருகிற 9-ஆம் தேதி வரை இந்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு காவல் துறையிடம் அனுமதி கோரியிருந்த நிலையில் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. எனினும், வட்டத் தலைவர் ராஜசேகர் தலைமையில் திரளான தொழிலாளர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாநிலத் தலைவர் விடுதலை குமரன் சிறப்புரை ஆற்றினார்.
 போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு வந்த காவல் துறையினர், போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுமாறு தொழிலாளர்களிடம் வலியுறுத்தினர். நீண்டநேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததைத் தொடர்ந்து, துணை வட்டாட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் பொதுப் பணித் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
 இதில், மாட்டு வண்டித் தொழிலாளர்களுக்கு மணல் குவாரி திறப்பது தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்ததைத் தொடர்ந்து, தொழிலாளர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். பேச்சுவார்த்தையின்படி உரிய நடவடிக்கை எடுக்கவில்லையெனில் மீண்டும் போராட்டம் நடத்தப்படுமென சங்கத்தினர் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com