9 கால்நடைக் கிளை நிலையங்கள் தரம் உயர்வு: அமைச்சர் எம்.சி.சம்பத் தகவல்

கடலூர் மாவட்டத்தில் 9 கால்நடைக் கிளை நிலையங்கள் கால்நடை மருந்தகங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக தொழில் துறை அமைச்சர் அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.
9 கால்நடைக் கிளை நிலையங்கள் தரம் உயர்வு: அமைச்சர் எம்.சி.சம்பத் தகவல்

கடலூர் மாவட்டத்தில் 9 கால்நடைக் கிளை நிலையங்கள் கால்நடை மருந்தகங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக தொழில் துறை அமைச்சர் அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.
அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியம், மாளிகைமேட்டில் உள்ள கால்நடை கிளை நிலையம், கால்நடை மருந்தகமாக தரம் உயர்த்தப்பட்டது. தரம் உயர்த்தப்பட்ட மருந்தக திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பண்ருட்டி எம்எல்ஏ சத்தியா பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.
 தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பங்கேற்று, மருந்தகத்தை திறந்து வைத்துப் பேசியதாவது: ஜல்லிக்கட்டு தொடர்பான அவசரச் சட்டத்தை 24 மணி நேரத்தில் தமிழக அரசு பிறப்பித்தது. தமிழக கால்நடை பராமரிப்புத் துறை மூலம் 2016-17-ஆம் நிதியாண்டில் மாநில அளவில் 100 கால்நடை கிளை நிலையங்களை தரம் உயர்த்தி, கால்நடை மருந்தகங்களாக மாற்ற ஆணையிடப்பட்டது. இதற்கான கூடுதல் செலவினம் ரூ.9.92 கோடியாகும்.
 இதில் கடலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 9 கால்நடை கிளை நிலையங்கள், கால்நடை மருந்தகங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதற்காக தமிழக அரசு ஒரு கால்நடை மருந்தகத்துக்கு ரூ.9.92 லட்சம் வீதம் ரூ.89.28 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியை மருந்துகள் வாங்குவதற்கும், அலுவலகச் செலவினங்களுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
 மாவட்டத்தில் கடலூர் ஒன்றியம் திருவந்திபுரம், பண்ருட்டி ஒன்றியம் பேர்பெரியான்குப்பம், காடாம்புலியூர், மாளிகம்பட்டு, கம்மாபுரம் ஒன்றியம் சேப்ளநத்தம் (தெற்கு), விருத்தாச்சலம் ஒன்றியம் தொரவளூர், மங்களூர் ஒன்றியம் எடைச்சித்தூர், நல்லூர் ஒன்றியம் பெலாந்துரை உள்ளிட்ட 9 கால்நடை கிளை நிலையங்கள் கால்நடை மருந்தகங்களாக மாற்றப்பட்டுள்ளன.
 கால்நடை உதவி மருத்துவர்களும், ஆய்வாளர்களும் விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயர உதவியாக இருக்க வேண்டும் என்றார் அமைச்சர். நிகழ்ச்சியில், அதிக பால் கறக்கும் ராஜஸ்தான் ரத்தி இன பசு, மாளிகைமேட்டைச் சேர்ந்த இயற்கை விவசாயி சதீஷ்குமாருக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
 நிகழ்ச்சியில் ஆவின் துணைத் தலைவர் இ.செல்வராஜ், மாளிகைமேடு பால் உற்பதியாளர்கள் சங்க முன்னாள் தலைவர் பி.ரங்கராமானுஜம், கால்நடை உதவி மருத்துவர் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 முன்னதாக கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் பி.மோகன் வரவேற்க, மாளிகைமேடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கத் தலைவர் ஜெகதீசன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com