மணவாய்க்கால் தூர்வாரும் பணி தீவிரம்: கிராம மக்கள் மகிழ்ச்சி

காட்டுமன்னார்கோவில் அருகே மழைக் காலங்களில் அடிக்கடி வெள்ளப் பெருக்கு ஏற்படும் மணவாய்க்காலை தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காட்டுமன்னார்கோவில் அருகே மழைக் காலங்களில் அடிக்கடி வெள்ளப் பெருக்கு ஏற்படும் மணவாய்க்காலை தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 காட்டுமன்னார்கோவில் பகுதியில் மழைக் காலங்களில் மணவாய்க்கால் மூலம் பெருக்கெடுத்து வரும் மழைநீர் 25 கிராமங்களை சூழ்ந்துவிடுவதால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்து வந்தனர். இதனால் மணவாய்க்காலை தூர்வார வேண்டும் என பல்வேறு கிராம மக்களும் வலியுறுத்தினர். இதனையடுத்து பொதுப்பணித் துறை சார்பில் மணவாய்க்கால் தூர்வாரி ஆழப்படுத்தப்பட்டு கரைகளை பலப்படுத்தும் பணி நடை பெற்று வருகிறது.
 இந்த வாய்க்கால் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ஷண்டன் கிராமத்தில் தொடங்கி, சுமார் 20 கி.மீ. வரை பல்வேறு கிராமங்களின் வழியாகச் சென்று குமராட்சியை அடுத்த வீரநத்தம் கிராமத்துக்கு அருகே வெள்ளியங்கால் ஓடையில் இணைகிறது. அரியலூர் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழைநீர் ஷண்டன் கிராமத்தில் வடவாற்றின் கீழ் பகுதியில் ஆரம்பிக்கும் மணவாய்க்காலில் கலக்கிறது. இங்கு தொடங்கும் மணவாய்க்கால் மேலகடம்பூர், கீழகடம்பூர், ஆயங்குடி, மோவூர், அழிஞ்மங்கலம், தொண்டமாநத்தம், மா.உடையூர், எடையார், திருமூலஸ்தானம் உள்ளிட்ட கிராமங்களில் பயணித்து வெள்ளியங்கால் ஓடையில் இணையும்.
 இந்த வாய்க்காலின் கரைகள் பல்வேறு இடங்களில் உடைந்து காணப்பட்டது. சில கிராமங்களில் கரைகளே இல்லை. மழைக் காலத்தில் சுமார் 25 கிராமங்களில் பெய்யும் மழைநீர் விநாடிக்கு சுமார் 10 ஆயிரம் கன அடி வீதம் மன வாய்க்காலில் செல்லும். கரைகள் இல்லாததால் மழைநீர் வாய்க்காலின் அருகே உள்ள திருநாரையூர், சிறகிழந்தநல்லூர், எடையார் உள்ளிட்ட கிராமங்களில் உள்ளே புகுந்துவிடும். இதனால் இந்தக் கிராமங்கள் காட்டுமன்னார்கோவிலில் இருந்து துண்டிக்கப்படும்.
 இவ்வாறு ஆண்டுதோறும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் கிராம மக்களின் நலன் கருதி மணவாய்க்காலை தூர்வார பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டது. இதன்படி இந்த ஆண்டு பொதுப்பணித் துறை சார்பில் பல்வேறு நீர் நிலைகள் தூர் வாரும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி மணவாய்க்கால் ஆழப்படுத்தப்பட்டு, கரைகள் பலப்படுத்தும் நடைபெறுகிறது. இதனால் வரும் காலங்களில் மழை வெள்ள பாதிப்பிலிருந்து 25-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மீளும் எனக் கூறப்படுகிறது.
 வாய்க்கால் கரைகள் பலப்படுத்தப்படுவதால், போக்குவரத்து சாலையாக மாற்றப்படும் பட்சத்தில் மிகப் பெரிய சாலை வசதி ஏற்படும்.
 இதனால், காட்டுமன்னார்கோவில் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்பட்டு, புறவழிச் சாலை வசதியும் கிடைக்கும். ஆகவே இந்த திட்டம் பொதுமக்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com