தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு முதலீட்டுக் கழகம் கடனுதவி

தமிழ்நாடு முதலீட்டுக் கழகம் அளிக்கும் கடன் உதவிகளைப் பெற்று தொழில் முனைவோராகும் வாய்ப்பினை பெறுமாறு மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாடு முதலீட்டுக் கழகம் அளிக்கும் கடன் உதவிகளைப் பெற்று தொழில் முனைவோராகும் வாய்ப்பினை பெறுமாறு மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் கேட்டுக்கொண்டார்.
 இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் புதிய தொழில் தொடங்கி வாழ்வில் முன்னேற்றம் அடைவதற்காக தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் பலவகையான நிதி உதவிகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளுக்கு வழங்கி வருகிறது.
 மாநில, மத்திய அரசுகள் வழங்கும் மானியங்களுக்கான முகவராகச் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் தனி நிறுவனம், கூட்டு நிறுவனம், வரையறுக்கப்பட்ட தனி நிறுவனம், வரையறுக்கப்பட்ட பொது நிறுவனம் ஆகியவற்றுக்கும் நிதி உதவிகளை அளிக்கிறது. கடலூர் மாவட்டத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் மார்ச் 2017 வரை 650 பேருக்கு ரூ.58.56 கோடி கடன் வழங்கியுள்ளது.
 குறு, சிறு தொழில்களுக்கான திட்டத்தில், திட்ட மதிப்பீடு ரூ.50 லட்சம் வரையிலும், இயந்திரம் வாங்க கடனுதவி திட்டத்தில் திட்ட மதிப்பீடு ரூ.1 கோடி வரையிலும் இருக்கலாம். இதற்கு இயந்திரங்களின் மொத்த விலையில் 25 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இந்தக் கடனை 7 முதல் 9 ஆண்டுகள் வரை திருப்பிச் செலுத்த தவணை வசதி வழங்கப்படுகிறது.
 உணவக விடுதிகள் திட்டம், மருத்துவத் திட்டம், கல்யாண மண்டபம், சமூகக் கூடம், மாநாட்டுக் கூடம், வணிக வளாகம் ஆகிய திட்டங்களில் பயனடைய விரும்புவோருக்கு ரூ.1 கோடி வரை கடன் வழங்கப்படுகிறது. இந்தக் கடனை 10 ஆண்டுகள் வரை திருப்பிச் செலுத்த தவணை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 சேமிப்புக் கிடங்கு, குளிர்பதன சேமிப்புக் கிடங்கு, காற்றாலை திட்டம், மின் ஆக்கிகள் திட்டம் ஆகிய திட்டங்களுக்கு பயனாளிகளின் பங்கு 35 சதவீதமும், கடன் தொகை 65 சதவீதமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடனை 9 ஆண்டுகள் வரை திருப்பிச் செலுத்த தவணை உள்ளது. உற்பத்தி செய்யும் அனைத்து குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு 3 சதவீத வட்டி மானியம் வழங்கப்படுகிறது.
 இந்தத் திட்டங்களின் கீழ் பயனடைய விரும்புவோர் பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு படித்திருக்க வேண்டும், முதல் தலைமுறை தொழில் தொடங்குவோராக இருத்தல் வேண்டும். திட்டத்தின் மதிப்பு ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை இருக்கலாம். பயனாளிகள் அவர்களின் விளிம்புத் தொகையாக 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை செலுத்த வேண்டும்.
 மேலும் விவரங்களுக்கு கடலூரில் உள்ள தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தை 04142 -230831, 292508 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் அதில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com