குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்புத் திட்டத்துக்கு ரூ.2.34 கோடி நிதி ஒதுக்கீடு

கடலூர் மாவட்டத்தில் குறுவை நெல் சாகுபடி சிறப்பு தொகுப்புத் திட்டத்துக்காக ரூ.2.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் தெரிவித்தார்.

கடலூர் மாவட்டத்தில் குறுவை நெல் சாகுபடி சிறப்பு தொகுப்புத் திட்டத்துக்காக ரூ.2.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் தெரிவித்தார்.
 இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூர் மாவட்டத்துக்கு உள்பட்ட டெல்டா வட்டாரங்களில் குறுவைப் பருவத்தில் மழை பற்றாக்குறை, தாமத நீர்வரத்தின் காரணமாக நெல் சாகுபடி குறையா வண்ணம் விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டு நடப்பு ஆண்டு குறுவை சாகுபடிக்கான சிறப்பு தொகுப்புத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி மாவட்டத்துக்கு குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்புத் திட்ட நிதியாக ரூ.2.34 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தில் 12 மணிநேரம் தடையில்லா மின்சாரம் வழங்குவது, உழவு மேற்கொள்வதற்கான உதவித் தொகை வழங்குவது, நீர்ப்பாசன குழாய்கள் மானியத்துடன் வழங்குவது, இயந்திர நடவு முறையை ஊக்குவிப்பது, நெல் மற்றும் பயறு வகை உற்பத்தியை அதிகரித்தல், இடுபொருள்களுக்கான உதவித் தொகை வழங்குவது ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
 இதில் ஒரு ஏக்கர் நெல் பயிருக்கு இயந்திர நடவுக்கான உதவித் தொகை அதிகபட்சமாக ரூ.4 ஆயிரம், துத்தநாக சல்பேட் 10 கிலோ, 400 மில்லி திரவ உயிர் உரம், நுண்ணூட்டக் கலவை ஆகியவை ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 5 ஏக்கர் நிலப்பரப்புக்கு மானியத்தில் வழங்கப்படும்.
 நெல் சாகுபடி செய்யும் பகுதிகளில் குறைந்த நீர் தேவையுள்ள பயறு வகை பயிர்களின் சாகுபடியை ஊக்குவிக்கும் பொருட்டு ஏக்கருக்கு 8 கிலோ சான்று விதைகளும், தேவையான 240 மில்லி திரவ நுண்ணுயிர் உரங்கள், இலைவழி ஊட்டக்கரைசல் தெளிப்பதற்கு 10 கிலோ டிஏபி உரம் போன்றவை வழங்கப்படுகிறது.
 மேலும் டிஏபி கரைசல் தெளிப்புக்கான செலவினம் மற்றும் உழவு மானியமாக ஏக்கருக்கு ரூ.500 வழங்கப்படுகிறது.
 இந்தப் பணியை வேளாண்மைப் பொறியியல் துறை மூலமாகவோ, சொந்த உழவு இயந்திரங்கள் கொண்டோ உழவு செய்து கொள்ளலாம். பின்னேற்பு மானியமாக இவைகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
 மேலும் நீர்ப் பாசனக் குழாய்கள் ஒரு அலகுக்கு வாங்குவதற்கும் ரூ.21 ஆயிரம் வரை வழங்கப்படும்.
 இந்தச் சலுகைகளைப் பெற டெல்டா பாசனப் பகுதியில் குறுவை பட்டத்தில் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரையோ அல்லது அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தையோ தொடர்புகொண்டு பயனடையலாம் என ஆட்சியர் அதில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com